-

பருவநிலை மாற்றம் - கார்பன் உறிஞ்சவேண்டிய காடுகளை கார்பன் உமிழ்கிறவையாக மாற்றிய மனிதர்கள் - Global Warming or Climate Change human changed forests as Carbon emitters

 புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும்.


ஆனால், காடுகள் கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக கார்பனை உமிழ்பவையாக மாறியுள்ளன என்பதும், அதற்கு மனித நடவடிக்கைகளும், பருவநிலை மாற்றமும் காரணமாகியுள்ளன என்பதும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தலங்களாக அறிவிக்கப்பட்ட உலகின் 10 காடுகள், கடந்த 20 ஆண்டுகளில் உறிஞ்சிய கார்பன் அளவைவிட அவை உமிழ்ந்த கார்பன் அளவு அதிகம் என்கிற மோசமான தகவல் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்படி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காடுகளின் மொத்த பரப்பளவு ஜெர்மன் நாட்டின் பரப்பளவைப் போல இரு மடங்கு ஆகும்.உலகில் உள்ள 257 பாரம்பரியக் காடுகள் மொத்தமாக சேர்ந்து ஆண்டுதோறும் 19 கோடி டன் கார்பனை வளிமண்டலத்தில் உறிஞ்சியதாகவும் அதே ஆய்வில் கண்டறிந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புதைபடிவ எரிபொருள்கள் வழியாக ஆண்டுதோறும் பிரிட்டன் உமிழும் கார்பன் அளவில் பாதி இது," என இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரான டாக்டர் டேல்ஸ் கார்வல்ஹோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ-வை சேர்ந்தவர் அவர்.


"பருவநிலை மாற்றத்தின் கெடு விளைவுகளை போக்குவதற்கு இன்றைய தேதிவரை இந்தக் காடுகள் ஆற்றியுள்ள இன்றியமையாத பங்கினைப் பற்றிய விளக்கமான சித்திரம் இப்போது நம்மிடம் உள்ளது," என அவர் கூறியுள்ளார்.

ஆனால், சட்ட விரோதமாக மரம் வெட்டுதல், காடுகளை ஒட்டி வேளாண் நிலங்களை விரிவாக்கம் செய்தல், காட்டுத் தீ போன்றவற்றால் காடுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இவற்றில் காட்டுத் தீ பிரச்சனை அதிகரிப்பதற்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

செயற்கைக் கோள் தரவுகளையும், தல அளவில் கிடைத்த கண்காணிப்பு புள்ளிவிவரங்களையும் இணைத்துப் பார்த்து உலகப் பாரம்பரிய காடுகள் 2001 -2020 காலகட்டத்தில் உறிஞ்சிய, உமிழ்ந்த கார்பன் அளவை ஆராச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.மொத்த மரங்கள், செடிகொடிகள் கொண்ட உயிர்த் திரள் உறிஞ்சிய பல பில்லியன் டன் கார்பன் அளவை கணக்கிட்ட இந்த ஆய்வில் சில காடுகள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காடுகள் அதி உயர் பாதுகாப்பை பெற்றவை. உலகத்துக்கு அவை பங்களிக்கும் இயற்கை வளங்களின் அளவை கருத்தில் கொண்டு உலக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்பட்டவை. நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்கப்படுகிறவை.

"இவ்வளவு இருந்தாலும் அவை பெரிய அளவில் நெருக்கடியை சந்திக்கின்றன," என்கிறார் கார்வால்ஹோ ரெசன்டே.

"வேளாண்மை சார்ந்த ஆக்கிரமிப்பு, சட்ட விரோத மரம் வெட்டுதல் ஆகிய மனித நடவடிக்கைகளே நெருக்கடிக்கான முக்கியக் காரணங்கள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகளையும் நாங்கள் கவனித்தோம். அவற்றில் முக்கியமானது காட்டுத் தீ," என்கிறார் அவர்.

'நச்சு சுழல்'

கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக சைபீரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் மூலம் பல கோடி டன் கரியமில வாயு உற்பத்தியாகி வளி மண்டலத்தில் கலந்தது.

இந்த காட்டுத் தீ சம்பவங்களை 'முன்னெப்போதும் காணாதவை' என்று யுனெஸ்கோ வருணித்தது.
"அதிக கார்பன் உமிழப்படுவதால், அதிகம் காட்டுத் தீ ஏற்படும். அதனால் மீண்டும் அதிகமான அளவு கார்பன் வெளியாகும். இது ஒரு நச்சு சுழல்," என்று டாக்டர் கார்வால்ஹோ ரெசென்டே கூறுகிறார். ஆனால், காட்டுத் தீ ஒன்று மட்டுமே பருவநிலை அபாயம் அல்ல.


கார்பன் உமிழ்ந்த பாரம்பரியக் காடுகள்

2001-2020 காலகட்டத்தில் உறிஞ்சியதை விட அதிகம் கார்பன் உமிழ்ந்ததாக கண்டறியப்பட்ட உலக பாரம்பரிய காடுகள் பட்டியல்:

  • வெப்பமண்டல மழைக்காடு, சுமத்ரா, இந்தோனீசியா
  • ரியோ பிளாடானோ பயோஸ்பியர் ரிசர்வ், ஹோண்டுராஸ்.
  • யோசமட்டீ தேசியப் பூங்கா, அமெரிக்கா.
  • வாட்டர்டான் கிளேசியர் இன்டர்நேஷனல் பீஸ் பார்க், கனடா, அமெரிக்கா.
  • தி பார்பர்டான் மக்கோஞ்ச்வா மலைகள், தென்னாப்பிரிக்கா.
  • கினாபாலு பூங்கா, மலேசியா.
  • அவ்ஸ் நர் பேசின், ரஷ்யா மற்றும் மங்கோலியா.
  • கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்கா, அமெரிக்கா.
  • தி கிரேட்டர் புளூ மவுன்டெய்ன்ஸ் ஏரியா, ஆஸ்திரேலியா.
  • மார்னே டிராய்ஸ் பிட்டன்ஸ் தேசியப் பூங்கா, டொமினிகா.


அபாயச் சங்கு ஊதும் செய்தி

2017ம் ஆண்டு மரியா புயல் வீசியதில் டொமினிகாவில் உள்ள மார்னே டிராய்ஸ் பிட்டன்ஸ் தேசியப் பூங்காவில் உள்ள 20 சதவீத காட்டுப்பகுதி அழிந்துபோனது.

"இந்த ஆய்வில் அபாயச் சங்கு ஊதும் ஒரு செய்தி உள்ளது," என டாக்டர் கார்வால்ஹோ ரெசென்டே தெரிவித்துள்ளார்.

உலகின் மிகச் சிறந்த, மிகவும் பாதுகாக்கப்பட்ட காடுகள் கூட பருவநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.

"எனவே, இந்தக் காடுகள் மட்டுமல்ல, எல்லா காடுகளும், கார்பன் உறிஞ்சுகிறவையாக தொடர வேண்டுமானால், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுகிற இடங்களாக அவை நீடிக்கவேண்டுமானால், உலக அளவில் கார்பன் உமிழ்வு அளவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம்" என்றும் கூறுகிறார் ரெசன்டே.


Credit: Thanks to bbc, images from google image search

0 comments: