நான் கற்றுக் கொண்டு, பின்பற்றிவரும் பின்வரும் வழிமுறைகளை, எந்த ஒரு புத்தகத்தையும், அதிலுள்ள கருத்துக்களை நன்கு மனதில் பதியவைக்க நீங்களும் முயன்று பாருங்கள். இது பாடநூல்கள் மட்டுமல்ல, எந்த ஒரு புத்தகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.
படிப்பதில் நான்கு படிகள் உள்ளன.
- படிப்பது (Reading) : ஒரு புத்தகத்தினை படிக்கும் போது, பத்தி பத்தியாக படிக்க வேண்டும். ஒரு பத்தியினை படித்த முடித்தபின்பே, அடுத்த படிக்கு செல்ல வேண்டும்.
- அடிக்கோடிடுவது(Underlining): படித்த பத்தியில் உள்ள முக்கியமான வரிகளை அடிக்கோடிட வேண்டும். இவ்வாறு, அடிக்கோடிடும் போது, படித்த பத்தியினை அடுத்த முறை முழுதாக படிக்க வேண்டிய அவசியமில்லை. முக்கிய வரிகளை படித்தாலே போதுமானது. இதன் மூலம், அவசியமற்ற வரிகளை மீண்டும் நாம் படிப்பதை தவிர்க்கிறோம். இதற்கு பின்பே, அடுத்த படிக்கு செல்ல வேண்டும்.
- சாராம்சத்தினை குறித்துக் கொள்வது (Outlining): படித்த பத்தி சொல்லவரும் கருத்தின் சாராம்சத்தினை, பத்திக்கு அருகிலேயே, குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பெடுத்துக் கொள்வதன் மூலம், அடுத்த முறை, அந்த சாராம்சத்தினை படித்தாலே, அந்த பத்தி சொல்லவரும் விடயம் விளங்கிவிடும். தேவைப்பட்டால், ஒரு படி கீழறங்கி, அடிக்கோடிட்ட வரிகளை மீண்டும் படித்து தெளிவடையலாம்.
- மறுபடி அலசுவது அல்லது மறுபடி பார்வையிடுவது (Reviewing) : இவ்வாறு மறுபடி அலசுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன.
- புத்தகத்தின் ஊடாகவே அலசுவது(Reviewing through the book): புத்தகத்தில் ஏற்கனவே கடந்து வந்த படிகளின் மூலமாக, நமக்கு சாராம்சமும், அடிக்கோடிட்ட வரிகளும் உள்ளன. சாராம்சத்தினை மறுபடி நினைவு கூர்ந்து, அந்த பத்திகள் என்ன சொல்ல வருகின்றன என்று மறுபடி அலசுவது. இது மாடு அசைபோடுவதைப் போன்றது. இவ்வாறு அசை போடுவதன் மூலமாக, அந்த புத்தகத்தின் கருத்துக்கள் நம் மனதில் மறுபடி புதுப்பிக்கப்பட்டு, அந்த கருத்துக்கள் ஆழமாக பதிகின்றன. தேர்வுகளுக்கு முன்பாக, இவ்வாறு, மறுபடி மறுபடி அலசுவது என்பது தேர்வுக்கு நம்மை நன்றாக தயார் படுத்த உதவும். தேர்வில் அது சம்மந்தமாக கேள்வி வரும்போது, எளிதாக கோர்வையாக எழுத உதவும்.
- குறிப்பேட்டின் ஊடாக அலசுவது (Reviewing through the hints): புத்தகத்தின் தலைப்புகள், உப தலைப்புகள், சாராம்சங்கள் போன்றவற்றை, ஒரு சிறிய குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்வது. இவ்வாறு குறித்து வைத்துக் கொள்வதன் மூலம், அந்த குறிப்பேட்டினை மறுபடி மறுபடி அலசுவது எளிதாகிறது. 300 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் குறிப்பேடு, கிட்டத்தட்ட 8 முதல் 10 பக்கங்களுக்குள் அடங்கிவிடும். இவ்வாறு, சிறிய குறிப்பேட்டின் மூலம், மறுபார்வை செய்வதென்பது எளிதாகிவிட்டு, 300 பக்க புத்தகத்தை புரட்டும் அவசியம் ஏற்படுவது குறைகிறது. நான் இந்த முறையைத் தான் பின்பற்றி வருகிறேன். இந்த குறிப்பேட்டினை மறுபடி மறுபடி அலச, புத்தகத்தின் கருத்துக்கள் நமது மனதில் எளிதாக பதிகின்றன. தேர்வில், எந்த ஒரு கேள்வியையும் எளிதாக கையாள முடிகிறது.

நான் மேலே குறிப்பிட்ட வழிமுறை, எனது பள்ளி, கல்லூரி காலங்களில் மட்டுமன்றி, இப்போதும் கூட, நான் பகுதி நேரத்தில், மேல்படிப்பு படித்து வருவதற்கு உதவி வருகிறது. எந்த ஒரு புத்தகத்தினை படித்தாலும், அதனை குறிப்பெடுத்து, மறுபடி நினைவு கூர்வதற்கு உதவுகிறது.
எவ்வாறு கணிணியில், பல்வேறு தரவுகள், சிறிய இடத்தில் சேமிக்கப்படுகிறதோ, அவ்வாறு பெரிய புத்தகத்தின் சாராம்ச குறிப்பேடு, அந்த புத்தகத்தினை, தேவைப்படும் போது, மறுபடி நினைவு கூற உதவுகிறது.
இவ்வாறு படித்து, குறிப்பெடுத்துக் கொள்வதன் மூலம், புதிய பாடத்தினை எளிதாக நினைவு கூர்ந்து, தேர்வு எழுதவோ அல்லது வாழ்வில் பயன்படுத்தவோ முடியும்.
0 comments:
Post a Comment