
மார்ச் 31க்குள், நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஆறு அம்சங்கள்!
நாம பாஸ் ஆயிட்டோமா? பர்ஸ்ட் கிளாஸா? எந்த பாடத்தில் எத்தனை மார்க்? – இப்படி ஒரு மாணவன், ஆண்டு தேர்வுக்குப்பின் தனது பிராகரஸ் ரிப்போர்ட் பார்க்கும் பரபரப்பு மன நிலைதான் ஒரு தொழிலதிபர்/ வணிகர்களுக்கும்!நிதியாண்டின் இறுதியில் தயாரிக்கப்படும், தங்கள் நிறுவனத்தின் லாப – நஷ்ட கணக்கு விவரங்களை கையில் வாங்கி பார்க்கும்போது, தொழிலதிபர் / வணிகர்களுக்கும் ரிசல்ட் பார்க்கும் ஒரு மாணவரின் மனநிலைதான் இருக்கும்.

கட்டளை ஒன்று: வங்கிகள் நிறுவனங்களுக்கு தரும் நடைமுறை மூலதன கடனே, ஒரு நிறுவனம் தடையற இயங்குவதற்கு மிக அவசியம். அந்த மூலதன கடன் தடையின்றி கிடைக்க நாம் வங்கிகளுக்கு தரும் தகவல்களில் தான் இருக்கிறது.வங்கிகளுக்கு, ஒரு நிறுவனம் அளிக்கும் ஸ்டாக் ஸ்டேட்மென்ட் விவரமும், நிதி நிலை அறிக்கையில் காண்பிக்கப்படும் ஸ்டாக் விவரங்களும் ஒன்றாக இருப்பது மிக மிக அவசியம். ஒரு நிறுவனம் அளிக்கும் ஸ்டாக் ஸ்டேட்மென்ட் அடிப்படையில்தான், வங்கிகள் நடைமுறை மூலதனக் கடனை, அதாவது, ‘ஓபன் கேஷ் கிரடிட் (ஓசிசி)’ ஒரு நிறுவனத்துக்கு வழங்குகிறது. சில நிறுவனங்கள், மார்ச் இறுதியில், வங்கிகளுக்கு அளிக்கும் ஸ்டாக் ஸ்டேட்மென்ட்டும், நிதி நிலை அறிக்கையில் தரும் ஸ்டாக்கும் வேறுபாடு உள்ளது. இதுபோன்ற வேறுபாடுகளை இப்போது வங்கிகள் அனுமதிப்பதில்லை. இப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில், நிறுவனங்களுக்கு நடைமுறை மூலதன கடனில் சிக்கல் வரலாம்.
கட்டளை இரண்டு: ஒரு நிறுவனம், ஒவ்வொரு நிதியாண்டிலும் சட்டப்படி செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளில் கவனம் செலுத்த வேண்டும். நிதியாண்டு இறுதிக்குள் அவற்றை உரிய ஊழியர்கள் கட்டி முடித்திருக்கிறார்களா என்பதை தொழிலதிபர்கள் சரி பார்க்க வேண்டும். அதன்படி, ஒரு நிறுவனம் அந்த நிதியாண்டுக்குள் செலுத்த வேண்டிய இ.எஸ்.ஐ. (எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ்), பி.எப். (பிராவிடன்ட் பண்ட்), ஜி.எஸ்.டி. (குட்ஸ் அன் சர்வீஸ் டாக்ஸ்), டி.டி.எஸ். (டாக்ஸ் டிடக்டட் அட் சோர்ஸ்), புரபஷனல் டாக்ஸ் போன்றவற்றை உரிய தேதிக்குள் செலுத்தி இருந்தால் மட்டுமே, அது அந்த நிதியாண்டில், நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட செலவாக வருமான வரித்துறை அனுமதிக்கும். எனவே, நிதியாண்டு இறுதிக்குள் மேற்கண்டவை உரிய முறையில் செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டளை மூன்று: ‘ரேஸியோ அனலசிஸ்’ (விகித பகுப்பாய்வு) என்பது ஒரு நிறுவனத்தின் பணப்புழக்கம், செயல்பாட்டு திறன், லாபத்தன்மை,கடனை திருப்பி தரும் திறன் போன்ற நுணுக்கங்களை பெறுவதற்கான, ஒரு அளவு முறையாகும். இந்த ரேஸியோ அனலசிஸ்தான், ஒரு நிறுவனம், வங்கிகளில் கடன் பெறுவதற்கு முக்கியமான காரணியாக அமைகிறது. இவற்றை ஆண்டு இறுதிக்குள் கணக்கிட்டு அனுகூலமாக மாற்றும் பட்சத்தில் உங்களுடைய கடன் மற்றும் நிதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும்
கட்டளை நான்கு: பொதுவாக, தொழில் நிறுவனங்களின் டாக்டர் போலத் தான் ஆடிட்டர் என்பவரும். ஒரு நோயாளியை புரிந்து கொண்டு டாக்டர் மருந்து அளிப்பதுபோல, ஒரு ஆடிட்டர், தான் சேவை புரியும் தொழில் நிறுவனத்தை புரிந்து கொண்டு அவ்வப்போது அறிவுரைகள் வழங்குவார்.அவர் சேவை தரும் நிறுவனத்தின், தொழில் நிறுவனங்களின் பலதரப்பட்ட வரி நிலவரங்கள், நிதி நிலைமை, லாபம் ஈட்டும் தன்மை போன்ற நுணுக்கங்களை அதன் ஆடிட்டர் மட்டுமே நன்கு அறிவார்... இதனால், உங்களுக்கே தெரியாத / அறியாத சட்ட மீறல்களை முன்கூட்டியே தடுக்க முடியும். அதனால் ஏற்பட இருக்கும் அபராதத்தில் இருந்தும் தப்பிக்க முடியும். எனவே உங்கள் ஆடிட்டரை அணுகி ஆண்டு இறுதிக்கான ஆலோசனையை பெற்று கவனமாக பின்பற்ற வேண்டும் என்பதே நான்காவது கட்டளை.
கட்டளை ஐந்து: ஒரு நிறுவனத்திற்கு வரவேண்டிய கடன் தொகைகள், வராக் கடன்கள், அட்வான்ஸ் ஆகியவற்றை ஆண்டு இறுதிக்குள் வசூல் செய்ய சிறப்பு முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, நிறுவனம் தனது ஊழியர்களில் பலருக்கு, பல வகைகளில் நிதியாண்டு முழுவதும் பல சந்தர்ப்பங்களில் அட்வான்ஸ் தொகை வழங்கி இருக்கும். பயண முன்பணம் (டிராவலிங் அட்வான்ஸ்) கூட வழங்கப்பட்டிருக்கும். அட்வான்ஸ் வழங்கப்பட்ட தொகைக்கான கணக்கு விவரங்களை உரிய காலத்தில் அல்லது நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31 ஆம் தேதிக்குள், நிறுவனத்தின் உரிய கணக்காளர்கள் கேட்டுப்பெற வேண்டும்.
கட்டளை ஆறு: தற்போதைய முறையில் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் கடன் பெறும் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்கள் குறித்த கிரெடிட் ரேட்டிங் பெறுதல் அவசியமாகிறது. கிரெடிட் ரேட்டிங் பொறுத்துதான் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிகளில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே கிரெடிட் ரேட்டிங் சாதகமாக இருக்கும் வகையில் வைத்துக் கொள்ளல் அவசியம். உதாரணமாக வங்கியில் உங்கள் நிறுவனத்துக்கு நடைமுறை மூலதன கடன் 3 கோடி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.அதில் 2.5 கோடியைத்தான் பயன்படுத்தி இருக்கிறீர்கள். மீதமுள்ள ரூ. 50 லட்சத்தை எடுத்து, சில நாட்களுக்கு உங்கள் கரண்ட் அக்கவுண்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று நிதியாண்டு இறுதியில் சில வங்கி மேலாளர்கள் கூறுவார்கள். காரணம், அது அவர்களின் அந்த நிதியாண்டுக்கான டார்க்கெட் ஆக இருக்கலாம். அவர் அறிவுரை கேட்டு நீங்கள் அந்த பணத்தை, கரண்ட் அக்கவுண்டுக்கு மாற்றினால், கிரடிட் ரேட்டிங்கில், உங்கள் நிறுவன டிராயிங் பவர் பாதிக்கப்படலாம். இதுபோல், மற்றவர்களுக்காக செய்யப்படும் விண்டோ டிரசங்கினால், உங்கள் நிறுவனம் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது அவசியம்.
நிதியாண்டின் இறுதிக்குள், இதுபோன்று ஆறு கட்டளைகள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை நிறுவனங்கள் பின்பற்றினால், நிதி நிலை அறிக்கை மேம்படும் . திருமணத்துக்கு ஒரு மணப்பெண் அலங்கரிக்கப் படுவது போல, சட்டத்துக்கு உட்பட்டு, நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை இதுபோல் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி அலங்கரித்துக் கொண்டால் அது கவர்ச்சிகரமாக இருக்கும்.கவர்ச்சியான, கவனிக்கத்தக்க ‘பேலன்ஸ் ஷீட்’தான், நிறுவனத்துக்கு நிதி வழங்கும், முதலீட்டாளர்களையும், வங்கிகளையும் ஈர்க்க வல்லமை கொண்டது. எனவே நிறுவனங்கள் இந்த நிதியாண்டின் இறுதி நாட்களில் மிக கவனமாக இருங்கள். குறிப்பாக, சிறு தொழில் அமைப்புகள் இதுபோன்ற அம்சங்களை கவனிக்காமல் விட்டு விடுகின்றன. அவையும் இவற்றில் கவனம் செலுத்தினால், வங்கிகள் உங்கள் வளர்ச்சியில் கைகோர்த்துக்கொள்ளும் என்பது நிச்சயம்.
0 comments:
Post a Comment