
தமிழ் எழுத்து பிறந்த கதை பற்றி இணையத்தில் படித்த சுவையான தகவல்கள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை எழுப்புவது உயிர் எழுத்துக்கள்.
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.
உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247
நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை. இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.
தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்த நம்மில் பலருக்கு தமிழ் எழுத்து வடிவங்களில் பயன்படுத்தப்படும் துணையெழுத்துகளைப் பற்றியும் அவைகளின் பெயரும் தெரியாது.

கா - என்னும் நெடிலை எப்படி எழுதுகிறோம்?
'க' என்ற குறில் எழுத்தை எழுதி அதன் அருகில் கால் போட வேண்டும்.
கொ என்ற ஒற்றை எழுத்தினைக் குறிக்க நாம் மூன்று எழுத்துகளை எழுதுகிறோம்.
முதலில் ஓர் ஒற்றைக் கொம்பினை இட்டு அடுத்து 'க' என்னும் உயிர்மெய்யெழுத்தை எழுதி - அதன் பின்னர் ஒரு துணைக்கால் வைக்கிறோம்.
இம்மூன்று தனித்தனி எழுத்துருக்களை எழுதினால்தான் 'கொ' - என்ற ஓர் உயிர்மெய் எழுத்து எழுதப்படுவதாகும்.
ஆனால் இவற்றில் கால், கொம்பு தவிர மற்ற துணையெழுத்தின் பெயர் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.
இங்கு அனைத்து துணையெழுத்துகளின் வகைகளையும் பெயர்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
* துணைக்கால் – கா, சா, தா, வா
* கொம்புக்கால் – ஊ, கௌ, சௌ. யௌ
* மடக்கு ஏறுகீற்றுக் கால் – ணூ, தூ, நூ
* ஒற்றைக்கொம்பு – கெ, நெ, செ,ளெ
* இரட்டைக்கொம்பு – கே, நே, சே,ழே
* இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு – கை, சை, நை, றை
* சாய்வுக்கீற்று – ஏ
* இறங்கு கீற்று – பு, சு, வு, யு
* மடக்கு ஏறு கீற்று – ணு, து, நு, லு. று
* பின்வளைகீற்று – கூ
* மேல்விலங்கு – கி, தி, பி, மி
* கீழ்விலங்கு – மு, ரு, கு, டு
* இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி – சூ, பூ
* மேல்விலங்குச் சுழி – கீ, தீ, ரீ, வீ
* கீழ்விலங்குச் சுழி – மூ, ரூ, டூ
* பிறைச்சுழி – ஆ
இத் தமிழ்த் துணையெழுத்து வடிவங்களின் பெயர்கள் அனைத்தையும்…இனி வரும் காலங்களில் புழங்கி மனதில் நிலைபெறச் செய்வோம்.
0 comments:
Post a Comment