-

வாரிஸ் டிரீ Waris Dirie

இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இவர் ஒரு பிரபல ஆப்பிரிக்கா நாட்டின் மாடல் அழகி வாரிஸ் டிரீஸ். இவரின் வாழ்க்கை கதை கேட்கவே நடுங்க வைக்கும் ஒரு பாவப்பட்ட பயங்கரமான ஒரு மூட பழக்கத்தின் கதை. 

007sathish

வாரிஸ் டிரீ Waris Dirie (சோமாலி: Waris Diiriye, அரபு: واريس ديري‎) (பிறப்பு 1965) என்பவர் சோமாலியவைச்சேர்ந்த மாடல், நடிகை, எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். 1997இல் இருந்து 2003வரை ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ மூலம் உலகின் பல நாடுகளிலும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடும் வாரிஸ் டைரி, நான்கு குழந்தைகளுடன் போலந்தில் வசித்து வருகிறார்.

இன்றைக்கு அவர் ஒரு கோடீஸ்வரர், இன்னும் சொல்லப்போனால் 1980ல் வந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இவர் நடித்தார், ஒரு புத்தகம் எழுதினர், UN தூதரக அதிகாரியாக சில ஆண்டுகள் இருந்தார், 100 கோடி சொத்து சேர்த்தார். ஆனால் இந்த பெண்மணி சிறு வயதில் அனுபவித்த கொடுமை மிகப்பெரிய கொடுமை. இது இவருக்கு மட்டும் நேர்ந்த கொடுமை கிடையாது. அந்த மலைவாழ் மக்கள் கூட்டத்தில் பிறந்த எல்லா பெண் குழந்தைகளுக்கும் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவம்.

வாரிஸ் தன் டைரி குறிப்பிலிருந்து தன் வாழ்க்கையில் நடந்ததை எண்ணி பார்க்கிறாள்... வாருங்கள் நாமும் சேர்ந்து பார்ப்போம்.

பசுமை என்றால் என்னவென்றே தெரியாத சோமாலியா நாட்டு பாலைவனத்தில் தான் நான் பிறந்தேன்.

ஒரு நாள் இரவு என் அம்மா தேவைக்கு அதிகமாகவே அன்று சாப்பாடு கொடுத்தாள் மேலும் தண்ணீர் மற்றும் பால் குடிக்கக்கூடாது என்று சொன்னாள்...

ஏன் அம்மா என்று கேட்டதற்கு, நாளைக்கு உனக்கு ஒரு சடங்கு இருக்கு அதற்காக தான் சொல்கிறேன். உங்கப்பா மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அவரு வந்ததும் நாம் போகலாம் என்றாள். நானும் நாளைக்கு நடக்கவிருக்கும் சடங்கை எண்ணி சந்தோஷமாக உறங்கினேன்.

விடியற்காலையில் என் அம்மா வாரிஸ் வாரிஸ் என்று என்னை எழுப்பினாள்.

வா சீக்கிரம் போகலாம் என்றாள்...

நானும் தூக்க கலக்கத்தோடு அவளை பின்தொடர்ந்தேன், கரடுமுரடான ஒரு காட்டுப் பாதையில் என்னை கூட்டிக்கொண்டு போனாள். நாங்கள் இருவரும் தூரத்தில் தெரியும் ஒரு மலைக் குன்றை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அந்த குன்றை அடையும்போது பொழுது விடிந்துவிட்டது.

அருகில் இருக்கும் ஒரு பாறையில் என் அம்மா என்னை படுக்க சொன்னார். சிறிது நேரத்தில் சரக் சரக் என்ற ஒரு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் பார்த்தால் ஒரு அகோரமான ஒரு கிழவி, அதாவது அந்த மருத்துவச்சி வந்தால்... என் அம்மா ஒரு மரக்கட்டையை வாயில் வைத்து கடிக்க சொன்னால், கொஞ்ச நேரத்தில் என் தொடைப் பகுதியில் அந்த மருத்துவச்சி கையை விட்டு துழாவி என் ஆடையை அவிழ்த்தாள்.

அப்புறம் அவள் எடுத்து வந்த பையில் எதையோ தேடி கடைசியில் ஒரு பிளேடு எடுத்தாள். ரத்தக்கரை படிந்த அந்த பிளேடை அவள் எச்சிலை துப்பி அந்த பிளேடை சுத்தம் செய்தால் பிறகு என்ன நடக்கும் என்று நான் யோசிக்கையில் என் அம்மா என் கண்ணை பொத்தினாள்.

என் பிறப்பு உறுப்பில் அந்த பிளேடு சரசரவென்று நாலாபக்கமும் ஓடியது அப்படியே செத்து விடலாமா என்று தோன்றியது. இன்றும் அந்த வலியை நினைக்கும்போது நெஞ்சுக்குள் ஒரு நெருப்பு ஜுவாலை என் உயிரை அழுத்தும்.

அந்தக் கிழவி என்ன செய்கிறான் என்று யோசிப்பதற்குள் அவள் எதையோ கொண்டு என் தோளை தைப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் கண்விழித்தேன். என் கால்கள் நடுங்கத் தொடங்கின.

ஒரு விலங்கை கொடூரமாக வெட்டிப் போட்டால் எப்படி ரத்த சகதியாக இருக்குமோ, அதே போல் இருந்தது, நான் படுத்து இருந்த பாறை.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்தது என்னுடைய குட்டி குட்டி சதைகள்.

அருகிலேயே அக்கேசியா எனப்படும் ஒரு முள் வகை அங்கு கொட்டி கிடந்தது. அப்போதுதான் எனக்கு சிறிது புரிந்தது. அந்த முட்களை கொண்டு என் சதைகளை தைத்தால் என்று.

ஒரு தீக்குச்சி சொருகும் அளவுக்கு ஒரு ஓட்டையை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை அவள் அந்த முட்களை கொண்டு ஒரு நூலினால் தைத்து விட்டாள்.

அது ஏன் என்று புரிவதற்கு முன்பே என் பிறப்பு உறுப்பில் ஆசிடை கொட்டியது போல் ஒரு எரிச்சல் ஏற்பட்டது. பின்பு தான் தெரிந்தது அந்த சிறு ஓட்டையின் வழியே சிறுநீர் வெளியேறியது.

வாழ்க்கையில் இனிமேல் தண்ணீரே குடிக்க கூடாது என்று முடிவெடுத்தேன். ஏனென்றால் அந்த வலியை மறுபடியும் எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்க துணிவும் இல்லாமல், உடம்பில் தெம்பும் இல்லாமல் நடுங்கியபடியே என் அம்மாவை பின்தொடர்ந்து அங்கே தற்காலிகமாக அமைந்திருந்த ஒரு குடிலில் தங்க வைக்கப்பட்டேன்.

என் அம்மா சொன்னாள், ஒரு வாரம் இங்கு தங்கி விட்டு உடம்பு சரியானதும் நாம் வீட்டுக்கு போகலாம் என்று.

ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ணுகிறீர்கள் அதற்கு பதிலாக என்னை தயவுசெய்து கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சினேன்.

ஓரிரு நாளில் எனக்கு காய்ச்சலும் வந்தது. ஆனால் என் அம்மா என்னை அக்கறையாக பார்த்துக் கொண்டதால், சில நாட்களிலேயே அந்த காய்ச்சல் சென்றுவிட்டது. பின்பு எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

வருடங்கள் உருண்டோடின, பின்பு தான் புரிந்தது அந்த சடங்கு சம்பிரதாயங்கள் என்னவென்று.

பெண்களின் தொடைகளின் நடுவில் நரகம் இருப்பதாகவும் அவர்களின் கன்னித்தன்மையை பாதுகாக்க இந்த சடங்குகள் செய்யப்படுவதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

வருடங்கள் பல கடந்தாலும் சின்னவயதில் தூக்கத்தில் என் அம்மா வாரிஸ்.. வாரிஸ்... என்று என்னை எழுப்பிய கணமும்.. பின்பு மலையின் உச்சிக்கு கூட்டிக்கொண்டு போய் எனக்கு செய்த கொடுமையை எண்ணி எண்ணி நான் அழுது கொண்டே இருப்பேன்.

அந்த ஒரு சம்பவத்தினால் என் பெயரை யார் உச்சரித்தாலும் என் உடல் நடுங்க தொடங்கியது.

அப்போது எனக்கு வயது பதிமூன்று இருக்கும், நான் நடந்த துயரத்தை மறந்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். என் வீட்டின் பின்புறத்தில் ஆட்டுப்பால் கறந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ வாரிஸ் வாரிஸ் என்று என்னை கூப்பிட்டார்கள்..

என் உடல் நடுங்கத் தொடங்கின, இதயம் பட படவென்று அடித்துக் கொண்டது, ரத்தம் உறைய தொடங்கியது, மெதுவாக திரும்பி பார்த்தேன்...

குறிப்பு: அவளுக்கு நடந்த சடங்கு என்னவென்றால் FGM எனப்படும் Female Genital Mutilation...

அதாவது நம்ம ஊரில் ஆண் குழந்தைகளுக்கு பண்ணும் சுன்னத்து வழக்கம்போல் சோமாலியா மற்றும் இதர ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், மத்திய கிழக்காசிய நாடுகளில் இது நடந்தது... கிட்டத்தட்ட 13 கோடி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

துணுக்கு செய்தி....வட இந்தியாவிலும் இந்த பழக்கம் இருந்தது.

பெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் நரகம் ஒளிந்து இருக்கிறது...

வாரிஸ் வாரிஸ் என்ற சத்தத்தை கேட்ட உடனேயே... உடல் உதற, ஈர குலை நடுங்க திரும்பிப் பார்த்தால் வாரிஸ்...

தூரத்தில் தன் அப்பா நிற்பதை கண்டு சிறிது நிம்மதி அடைந்தால் வாரிஸ். இருந்தாலும் தன் அப்பா இவ்வளவு பாசமாக தன்னை அழைப்பது கிடையாதே என்று சந்தேகத்துடன் அப்பாவை நெருங்கினால் வாரிஸ்.

வாரிஸ் !! உன்னை நான் இதுவரை பிரிந்ததே கிடையாதே, இனிமேல் நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் வாரிஸ் என்று அப்பா கொஞ்சம் சோகத்துடன் இந்த வாக்கியத்தை சொன்னார்.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் ஏன் அப்பா அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன்...

அதற்கு அப்பா, வாரிஸ்... நாங்கள் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறோம். கல்யாணம் பண்ணி கொண்டால், நீ உன் புருஷன் வீட்டுக்கு தானே போக வேண்டும். அப்போது அப்பா உன்னை பிரிந்து தான் இருக்க வேண்டும். அதனால்தான் நான் அப்படி சொன்னேன் என்றார்.

அதற்கு நான் கொஞ்சம் கோபத்துடன், எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். (எங்கள் நாடோடி வாழ்க்கையில் பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்தே ஆக வேண்டும், அவர் ஒரு வயது என்ன விட மூத்தவராக இருந்தாலும் அவரை எதிர்த்துப் பேசவோ, மரியாதை குறைவான வார்த்தைகளையோ உபயோகிக்கக் கூடாது)

எனக்கு அப்பாவை நேர் கொண்டு பேசவே எனக்கு ரொம்ப பயம். அதிலும் அவர் எப்பவும் மிரட்டல் தொனியில் தான் என்னிடம் பேசுவார். இதை நான் சொன்னவுடன் அவர் உரத்த குரலில், நீயும் உன் அக்காவை போல ஓட போகிறாயா? அதெல்லாம் முடியாது, நாளைக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்பவர் இங்கு வருவார். அவர் நமக்கு ஐந்து ஒட்டகங்கள் தருவதாக சொல்லி இருக்கிறார்.

அதனால் முரண்டு பண்ணாம, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ, உனக்கு கீழே தம்பி தங்கைகள் வாழ்க்கை இருக்கு, அதை கொஞ்சம் யோசித்து பார் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அப்பா.

(எங்கள் ஊரில் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அளக்க உதவும் அளவு கோல், அந்த குடும்பத்தில் எவ்வளவு ஒட்டகம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது)

மறுநாள் நான் ஆட்டுக்கு பால் கறந்து கொண்டிருக்கும் போது என் தங்கை ஓடிவந்து சீக்கிரம் வா உன்னை அப்பா கூப்பிடுகிறார் என்று அழைத்தாள்.

வீட்டு வாசலில் என் அப்பாவும் அவருடைய மாமா அல்லது அவருடைய தாத்தாவாக இருக்கலாம் என்று எண்ணிய ஒரு பெரியவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்பா சந்தோஷத்துடன் என்னை வரவேற்றார், வா வாரிஸ், இவர் தான் நீ கல்யாணம் பண்ணி கொள்ள போகும் கணவன் என்றதும், எனக்கு தூக்கி வாரி போட்டது. காரணம் என் அப்பா காண்பித்த அந்த ஆளுக்கு கிட்டத்தட்ட 60 வயது இருக்கும், எனக்கு 13 வயது. என் அப்பாவே அவரை விட இளமையாக இருந்தார்.

ஒரு தடவை என் அக்காவை ஒருவன் கற்பழிக்க முயற்சி செய்தான் என்ற ஒரு காரணத்திற்காக அவனை துவம்சம் செய்து 5 கத்தி குத்து வாங்கினாலும் அவனைக் கொலை செய்தார் என் அப்பா.

இந்த கிழட்டு மூதேவி நம்பிப் போனால், யாராவது வந்து கேட்டால் போதும், இவனே என் கையை பிடித்து கொடுத்து விடுவான்.

என் அப்பாவிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன், அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை, மாறாக என்னை மனம் மாற்றம் செய்வதில் தான் குறியாக இருந்தார்.

நான் எப்படி அப்பா அந்த கிழவனை கல்யாணம் பண்ணி கொள்ள முடியும் என்று கேட்டதற்கு, அப்பா சொன்ன பதில் என்ன தெரியுமா? அவன் கிழவனாக இருப்பதால் அவன் உன்னை விட்டு போக மாட்டான், வேறு பெண்ணை தேட மாட்டான், அவன் சொத்து முழுவதும் உன் கைக்கு வந்துவிடும்.... அதனால் நீ நிம்மதியாக இருக்க முடியும் என்றார்.

எனக்கு வேறு ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. இவன் இரண்டு மூன்று பிள்ளைகளை கொடுத்த பின்பு இறந்து போனால், எங்கள் நாடோடி வழக்கப்படி விதவைகள் மறுமணம் செய்யக்கூடாது. அதனால் நான் காலம் பொழுதும் அந்த குழந்தைகளை வளர்ப்பதற்கு என் வாழ்வை தியாகம் செய்தாக வேண்டும்.

எந்த விதத்திலும் எனக்கு அந்த கிழவன் பொருத்தமாக இல்லை, அதனால் வீட்டை விட்டு ஓடுவது தான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன்.

ஆனால் எங்கு செல்வது என்று தான் எனக்கு ஒரு குழப்பம். என் அத்தை அதாவது என் அம்மாவின் தங்கை மோகாடிஷ்யூ என்ற ஊரில் இருந்தார். அங்கு சென்று நாம் மற்ற வழிகளை பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்.

இருந்தாலும் அம்மாவிடம் கடைசியாக ஒருமுறை மன்றாடி பார்க்கலாம் என்று யோசித்தேன்.

உடனே ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்து அழுதேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் கடைசி வரைக்கும் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு, ஒட்டகங்களை பராமரித்துக் கொண்டு உங்களுடனே வாழ்கிறேன். அதையும் மீறி அவருக்கு கல்யாணம் பண்ணி வைத்தால், நான் வீட்டை விட்டு ஓடி விடுவேன், அக்கா ஓடினது போல.

அந்த வார்த்தை சொன்ன மறுவினாடி என் அம்மா பளார் என்று அறைந்தார். அப்படி எல்லாம் பேசக்கூடாது போ என்று அதட்டி என்னை படுக்க வைத்தார்.

நான் ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை விடியற்காலை இருக்கும் திடீரென்று அம்மா என்னை எழுப்பினார்.

வாரிஸ்... வாரிஸ்

நமக்கு தான் நம் பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போய் விடுவோமே, அதனால் தூக்கிவாரிப் போட்டதுபோல் எழுந்தேன்.

அம்மா என்னை இருக்க கட்டி பிடித்து காதில் மெதுவாக, அப்பா எழுவதற்குள் நீ ஓடி விடு என்றார்.

அம்மா அந்த வார்த்தையை சொன்ன அந்த கண நேரத்தில் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இருந்தாலும் நான் இந்த நொடியில் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.

எனக்கு தாயை பிரிய மணமில்லை, இருந்தாலும் அங்கேயே இருக்க எனக்கு விருப்பமில்லை.

மெதுவாக வெளியே வந்தேன்.... அங்கே எனது அப்பாவின் குறட்டை சத்தம் சீராக கேட்டது.

அந்த இருட்டில் என் தாயின் முகம் சரியாக தெரியவில்லை இருந்தாலும் அவளை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டேன். அப்பொழுது உணர்ந்தேன் நான் முத்தமிட்டது அவன் கண்ணீரில் மீது தான்.

என்னை மறந்து விடாதே வாரிஸ் என்று அம்மா அழுதாள். நான் ஒரு போதும் உன்னை மறக்க மாட்டேன் அம்மா... கூடிய விரைவில் நான் திரும்பி வந்து உன்னை கூட்டி கொள்கிறேன் என்று மீண்டும் ஒருமுறை கட்டிப்பிடித்து அவளிடம் இருந்து விடை பெற்றேன்.

சோமாலியா நாட்டின் தலைநகரான மோகாடிஷ்யூ செல்ல வேண்டும் என்று மட்டும்தான் என் மனதில் இருந்தது, ஆனால் அது எந்த திசையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் நான் மனம் போன போக்கில் ஓடத் தொடங்கினேன். ஒரே இருட்டு, பாதை தெரியவில்லை இருந்தாலும் என் பயணத்தைத் தொடர்ந்து விட்டேன்.

ஓடினேன், ஓடினேன், நடந்தேன், ஓடினேன், நடந்தேன், சிறிது நேரம் உட்கார்ந்தேன், பின்பு என் பயணத்தை தொடர்ந்தேன். எவ்வளவு மணிநேரம் ஓடினேன் என்று எனக்கே தெரியவில்லை. சூரியன் மெல்ல மெல்ல எட்டிப்பார்த்து சுளீரென்று என் முகத்தில் ஒளியை வீசியது. மிகவும் களைப்பாக இருந்தது, இருந்தாலும் என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தேன், தாகம் ஒரு பக்கம் என்னை சோர்வடைய செய்தது, இருந்தும் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தேன்.

முதலில் மன பிரமை என்று தான் நினைத்தேன் ஆனால் மெலிதாக, மிகவும் சன்னமாக வாரிஸ் வாரிஸ் என்று என் பெயரை கூப்பிடுவது எனக்கு மெலிதாக கேட்டது. திரும்பி பார்த்தால் தூரத்தில் என் அப்பா என்னை பின் தொடர்வதை கவனித்தேன்.

எனது அட்ரினல் சுரப்பி வேகமாக சுரக்க எடுத்தேன் ஓட்டம். ஓடினேன் ஓடினேன் வேகமாக ஓடினேன். ஓடும்போதே எண்ணிக்கொண்டிருந்தேன், எப்படி என் பாதையை அவர் கண்டுபிடித்தார். எங்கள் நாடோடி வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப சகஜம், ஒருவரின் கால் தடத்தை வைத்து அவரை எவ்வளவு உயரமானவர் என்று நாங்கள் அறிவோம், அதே விதியை தான் என் தந்தை கையாண்டார். அதனால், நான் மண் பாதையை தவிர்த்து மலை மற்றும் கல்லில் மேல் ஓடத் தொடங்கினேன்.

பாவம் என் அப்பா என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தங்கிவிட்டார். நான் திரும்பிப் பார்க்கையில் ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு புள்ளியாகத் தெரிந்து மறைந்தார், இருந்தாலும் நான் என் வேகத்தை விடவில்லை ஓடிக்கொண்டே இருந்தேன். அப்போது நண்பகல் மேலாகிவிட்டது எனக்கு நன்றாக தெரியும் என் அப்பா திரும்பிவிடுவார், ஏனென்றால் இருட்டுவதற்குள் அவர் வீடு செல்ல வேண்டும் இல்லை என்றால் வீட்டிற்கு வழி கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

மெழுகை நெருப்பில் வாட்டி அதன் ஒரு துளியை நம் தோளில் ஊற்றினால் ஒரு சூடு தெரியுமே, அதே வெப்பம் தான் அந்தப் பாலைவன மணலில் இருந்தது. இருந்தாலும் நான் என் முயற்சியை கைவிடவில்லை ஓடிக்கொண்டே இருந்தேன். எத்தனை நாள் ஓடினேன் என்று எனக்கே தெரியாது, ஆனால் பல இரவு பகல் சென்று கொண்டே இருந்தது.

எங்கள் வாழ்க்கையில் சாப்பாடு ஒரு பிரச்சினையே இல்லை, ஏனென்றால் பல நாட்கள் நாங்கள் பட்டினியாக இருந்திருக்கிறோம். கோடைகாலங்களில் பல மிருகங்கள் இறந்து போயிருக்கின்றன, எங்களுக்கு முக்கியமான உணவே ஒட்டகத்தின் பால் தான். ஒட்டகமே இல்லாதபோது எங்களுக்கு உணவு எப்படி இருக்கும்?

ஆனால் என்னுடைய இப்போதைய பிரச்சனை சாப்பாடு அல்ல, தண்ணி அல்ல, அந்த பாலைவன மணலின் சூடு என் பாதங்கள் கொப்பளித்து வெடித்து செய்யுது, ரத்தம் கசியத் தொடங்கியது, அந்த வலி என் பயணத்தைத் தொடர முட்டுக்கட்டையாக இருந்தது.

வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால், ஏதாவது ஒரு மரநிழலில் படுத்து உறங்கி, திரும்பவும் என் பயணத்தை தொடர்வேன். விடியற்காலை சூரியன் எழுவதற்கு முன் என் பயணத்தைத் தொடர்வேன். இப்படி தான் என் பயணம் போய்க்கொண்டிருந்தது.

அப்படியான ஒரு பொழுதில் மிகவும் சோர்வாகி, மிகவும் தள்ளாடி, காலில் கொப்புளங்கள் வெடித்த வலி அதிகமாகவே ஒரு மரநிழலில் உறங்கினேன்.

எப்பொழுது உறங்கினேன் என்று நினைவில் இல்லை, ஆனால் திடீரென்று என் கனவில் என் அப்பாவின் குறட்டை சத்தம் கேட்டது. ஆனால் அந்த சத்தம் மிகவும் சத்தமாக கேட்கவே, நான் பயந்து அப்பா வந்து என்னை வந்து பிடித்து விட்டாரோ என்று கண் விழித்தேன்.

கண்களை மெதுவாக திறந்து பார்த்தால் எதிரே ஒரு உருவம், ஆனால் அது என் அப்பாவைப் போல் தெரியவில்லை, ஒரு விலங்கைப் போல் தெரிந்தது. இன்னும் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தேன்.

அது ஒரு ஆண் சிங்கம்.

நாக்கை சுழற்றி கொண்டு என்னை நோக்கி அது மெதுவாக வந்தது...

நான் ஆயிரம் முறை சிங்கத்தை காட்டில் பார்த்து இருப்பேன். ஆனால் இவ்வளவு பக்கத்தில் பார்த்தது கிடையாது. அந்த தேன் நிற கண்களை கொண்ட சிங்கம் என் அருகில் வந்தது. அதனுடைய மூக்கின் அருகில் உள்ள முடி என் முகத்தில் ஊசி போல் குத்தியது.

அதனுடைய மிருக வாசனை என்னையுமறியாமல் சிறுநீர் கழிக்க வைத்தது. செத்த பிணம் போல் உறைந்து அந்த மரத்தின் மீது சாய்ந்து படுத்து விட்டேன். இன்னும் சில நொடிகள் தான், நான் இந்த பூமியை விட்டு போகப் போகிறேன். என் அம்மாவுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறிவிட்டேன். என்னுடன் கூடப் பிறந்தவர்களை இனி என் வாழ்நாளில் பார்க்கப் போவதும் இல்லை. அல்லாஹ்வே தயவு செய்து என் உயிரை எடுத்துக்கொள் எனக்கு இந்த மரணபயம் வேதனையாக இருக்கிறது.

அந்த மிருகத்துடன் என்னால போராட முடியாது என்பது எனக்கு சர்வநிச்சயமாக தெரியும். எழுந்து ஓடவும் என் உடம்பில் தெம்பு இல்லை, எதிர்த்து தாக்கவும் எனக்கு பலம் இல்லை. பேசாமல் அதற்கு இரையாக ஆவது மேலென்று... இருக்கையை தூக்கி வா என அடித்துக் கொல் என்று சிங்கத்தை வேண்டினேன்.

இப்பொழுது என்னை ஓங்கி ஒரு அறை கொடுக்க போகிறது, அப்போது என் மண்டை உடைந்து சாகப்போகிறேன். இதுதான் என் வாழ்வின் கடைசி நொடி என்று நினைக்கும் பொழுது, அந்த சிங்கம் என் முகத்தருகே வந்து முகர்ந்து பார்த்து சென்றுவிட்டது.

என்னால் அந்த காட்சியை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. பல நூறு மைல்கள் நடந்து சென்று இருப்பேன். அப்போதும் என்னால் அந்த காட்சியை விட்டு விலக முடியவில்லை. ஏன் என்னிடம் இருந்து விலகி சென்றது. என்னை பார்த்து பயப்பட என்னிடம் ஒன்றும் இல்லை, பின்பு ஏன் ஏன் ஏன் என்று கேள்வி ஆயிரம் முறை என் மனதில் உதித்தது.

மரக் குச்சியை போன்ற கால்கள், காய்ந்து போன என் தலைமுடி, கொஞ்சம் கூட சதை இல்லாமல் வற்றிப்போன என் முகம், பூஞ்சை அடைந்த என் கண்கள் இதையெல்லாம் பார்த்து இது வல்லூறு சாப்பிட்டு மிச்சம் வைத்த எலும்புக்கூடு என்று சிங்கம் நினைத்திருக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.

கால்கள் என்னிடம் கெஞ்சின, பசி என்னை சாப்பிட ஆரம்பித்தது, சோர்வு என்னை சொக்கி இழுத்தது, இதற்கு மேல் நடக்க முடியாது என்று மூளை எனக்கு கட்டளையிட்டது, நான் கடைசியாக மனசாட்சியிடம் மன்றாடினேன். அதோ தெரிகிறது பார் ஒரு மலை அந்த மலைப் பக்கத்தில் பறவைகள் தெரிகின்றன, அதுவரைக்கும் செல்வோம் அங்கு தண்ணீர் எதுவும் இல்லை என்றால் அங்கேயே விழுந்து சாவோம் என்று மனசாட்சியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

மூளை என்னிடம் பொய் சொல்லி விட்டது, கொஞ்சம் கூட சக்தி இல்லை என்று என்னிடம் சொல்லிய மூளை திடீரென்று எனக்கு ஒரு சக்தியைக் கொடுத்தது. அதனால் அந்த மலைக் குன்றை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்த என் அம்மா என் தந்தையை காதலித்த ஒரே காரணத்திற்காக அவருடன் ஓடி வந்துவிட்டார். அவரின் தந்தையார் ஒரு நாடோடிக்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். நகர்ப்புறத்தில் இருந்த ஒரு பெரிய செல்வந்தரின் மகள் தான் என் அம்மா. அதை விடுத்து அன்றாடச் சோற்றுக்கே கஷ்டப்படும் என் அப்பாவை கைபிடித்தார் என் அம்மா. 14 வயதில் ஓடி வந்த என் அம்மா, 12 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில் நான்கு குழந்தைகள் பிறந்த உடனேயே இறந்து விட்டது. இளவயதில் பெண்களுக்கு நடக்கும் சடங்கில் எனது அக்கா அந்த ரணம் ஆறாமல் காய்ச்சல் வந்து இறந்து போனார். இன்னும் ஒரு அக்கா தொலைந்து போனார்.

ஒரு தடவை வேடிக்கையாக என் அம்மா என் அப்பாவிடம் இவ்வாறு கூறினார். நான் ஏற்கனவே 12 குழந்தைகளை பெற்றெடுத்து ஆகிவிட்டது, அதனால் என்னால் இனிமேல் குழந்தையை பெற முடியாது, வேண்டுமென்றால் நீங்கள் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள் என்றார்.

சில நாட்களில் என் தந்தையார் ஒரு 14 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் அம்மா முன்பு வந்து நின்றார். நிலைகுலைந்து போன என் அம்மா அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் அழுத அழுகை எனக்கு நன்றாக தெரியும்.

இவ்வளவு நடந்தும் என் அம்மா நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை... கடைசிவரை குழந்தைக்காகவே அவர் நிறைய தியாகங்கள் செய்தார்.

அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் என் அம்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பேன். ஆனால் அந்த நம்பிக்கை இப்பொழுது பொய்த்து விடும் போலிருக்கிறது. மலையை நெருங்கிவிட்டேன், ஆனால் தண்ணீர் தென்படவில்லை.

சிங்கத்திடம் தப்பிய நான் இங்கு தண்ணீர் இல்லாமல் சாகப்போகிறேன் என்று நினைத்து வேதனை அடைந்தேன்.

அப்போதுதான் அல்லாஹ்வின் கருணை என் மீது பாய்ந்தது. இடது பக்கம் திரும்பி பார்க்கையில் பத்து பதினைந்து ஒட்டகங்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன.

ஒட்டக மேய்ப்பவன் தூரத்தில் வந்து கொண்டிருந்தான் நான் சிறிதும் யோசிக்காமல் நேரே ஒட்டகத்தின் மடியில் போய் வாயை வைத்து சுவைக்க ஆரம்பித்தேன். இதைப் பார்த்த அந்த மேய்ப்பவன்... சீ நாயே... ஓடிப்போ என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி ஓடி வந்தான். கையில் சவுக்கு இருந்தது அந்த சவுக்கு ஓராயிரம் முட்களுக்கு நிகரானது. நான் எதைப் பற்றியும் கவலைப் படாமல் வேகமாக பாலை குடிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் ஒட்டகத்தின் பாலில் அவ்வளவு புரதம் இருக்கிறது.

அந்த மேய்ப்பவன் அருகில் வந்துவிட்டான், அவன் சவுக்கை எடுத்து விலாச, அதன் நுனி என் முதுகில் உரசி சென்றது. பின்பு நான் சுதாரித்து ஒட்டகத்தின் அடியில் குனிந்து அவனிடமிருந்து தப்பித்து ஓடினேன்.

ஒட்டகப் பால் குடித்ததால் தெம்பு அடைந்த இந்த உடம்பு, மான் போல் ஓட ஆரம்பித்தது. என் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த ஆள் தோற்றுப் போய்விட்டான்.

சில மைல்கள் கடந்து இருப்பேன், சில வீடுகள் தென்பட்டன. அதையும் கடந்து போனபின், கருப்பாக ஒரு பாம்பு போல் பெரிசாக ஒன்று போனது. பின்னாளில் அது தார் ரோடு என்று அறிந்து கொண்டேன்.

நான் ஆசையாக அந்த பாம்பின் நடுவில் நடந்து போனேன். இதைப் பார்த்து பொறாமைப்பட்ட ஒரு பெண்மணி என்னை திட்டினாள், ஏயே நாயே நடுவில் போகாதே ஓரமாகப் போ என்று.

ஏன் ஒரு நாடோடிப் பெண் நடுவில் போகக்கூடாதா? ஓரமாகத் தான் போக வேண்டுமா என்று கேட்க நினைக்கையில்....கீர்ச் என்று அசுர வேகத்தில் வந்த ஒரு மிருகம் என் பின்னே தடுமாறி நின்றது.

அதற்குப் பெயர் லாரி என்று பிறகு தெரிந்தது. அதற்காகத்தான் அந்த பெண்மணி என்னை திட்டினார் என்பதும் விளங்கியது.

அந்த விலங்கின் கண்ணிலிருந்து ஒரு மனிதன் வந்தான். என்னை கண்டபடி திட்டி விட்டு, ஓரமாக என்னை தள்ளிவிட்டு சென்றான்.

எனக்கு அப்போது லிஃப்ட் கேட்பது எப்படி என்பது தெரியாது. ஆனால் நான் கையை காட்டியவுடன் ஒரு லாரி என்னருகில் வந்து நின்றது. அதில் இருந்த ஒருவன் கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்தான். அந்த சிரிப்பின் நடுவில் அவன் பல்லின் புகையிலை கரை எனக்கு எரிச்சலை ஊட்டியது.

எங்கே போகவேண்டும் என்று கேட்டான்?

நான் தலைநகரம் போகவேண்டும் என்றேன், சரி ஏறிக்கொள் என்று சைகை காட்டினான். நான் லாரியின் பின்புறத்தில் ஏறினேன்.

சிறிய சிறிய பாறைக் கற்களை கொட்டி வைத்திருந்தார்கள். ஒரு ஓரத்தில் படுத்து கண் உறங்க தொடங்கினேன்.

திடீரென்று என் தொடையில் ஒரு கை ஊர்வதை கவனித்தேன். திடுக்கிட்டு எழுந்து பார்க்கையில் அந்த கரை பிடித்த பல்லன், எனது கால்களை விரிக்க சொன்னான். அவனது முரட்டுக் கைகள் என்னை துவள செய்தது, அவனிடம் போராடுவது வீண் வேலை என்று எண்ணினேன், அதனால் அவனை வேறு விதமாக எதிர்கொள்ள தயார் ஆகினேன்.

அவனிடம் ஆசையாக பேசி, கொஞ்சம் பொறுத்திரு நான் சிறுநீர் கழித்து விட்டு வருகிறேன் என்று அவனிடம் கூறினேன். லாரியோ அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நான் லாரியின் மேலே சென்று சிறுநீர் கழிப்பது போல் பாசாங்கு செய்தேன். அப்படியே இருட்டில் கையை துழைவி என் கையில் அடங்குமாறு ஒரு கல்லை பற்றிக்கொண்டேன். அவனுக்கு தெரியாதவாறு அந்த கல்லை பின்புறம் மறைத்து வைத்தேன். அவன் ஆசையுடன் என்னை நெருங்கும்போது அவனது பொட்டில் ஓங்கி அடித்தேன்.

அந்த அலறல் சத்தத்தை கேட்ட டிரைவர் வண்டியை நிறுத்தினார். நான் பூனைபோல குதித்து அருகில் இந்த இருட்டுப் புதரில் ஓடி மறைந்து கொண்டேன்.

அவன் கண்டிப்பாக இறந்து போயிருப்பான். காரணம் நான் கல்லால் அடித்ததால், அவன் போட்ட அந்த அலறல் சத்தத்தில் டிரைவர் வண்டியை நிறுத்தி பின் பக்கம் ஓடி வரும் தருவாயில், நான் பூனை போல் வண்டியிலிருந்து குதித்து அருகில் இருக்கும் இருட்டு புதரில் ஓடி மறைந்து ஒளிந்து கொண்டேன். அவன் என்னைப் பற்றியும் என் அம்மாவைப் பற்றியும் தரக்குறைவாக திட்டுவது என் காதில் கேட்டது.

சிறிது நேரத்தில் அந்த டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போய் விட்டார், அடி பட்டவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல விரைந்து இருக்கலாம். நான் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்து விட்டு அந்த வண்டி நீண்ட தூரம் சென்ற பிறகு வெளியே வந்தேன்.

வேறு வண்டி வருகிறதா என்று காத்து கொண்டு இருந்தேன். தொலைவில் வெள்ளை நிற பென்ஸ் ஒன்று வந்தது. இவன் எங்கே நிறுத்த போகிறான் என்று அவ நம்பிக்கையில் கை காட்டினேன். என்ன ஆச்சரியம். அந்த வண்டி நின்றது. எங்கே போக வேண்டும் என்று கனிவாக கேட்டான்.

நான் தலைநகரம் போக வேண்டும் என்றேன், ஆனால் அவனோ நான் "கால்கயோ" வரை தான் செல்கிறேன் என்றான். இருந்தாலும் அந்த ஊரில் என் மாமா அகமது இருப்பதாக ஒரு நியாபகம். அவரின் ஆடு மாடுகளை நான் தான் வளர்த்து கொண்டு இருக்கும் காரணத்தினால் அவர் எனக்கு உதவுவார் என்ற நம்பிக்கை.

அவருக்கு இரண்டு பிள்ளைகள், பள்ளி விடுமுறை காலத்தில் அவர்களை கூட்டி கொண்டு எங்கள் ஊருக்கு வருவார். ஒரு முறை அவரிடம் எனக்கு நல்ல செருப்பு வேண்டும் என்றேன். பல வருஷ வேண்டுதலுக்கு பிறகு ஒரு ரூபாய் கூட பெறாத செருப்பை வாங்கி கொடுத்தார்.

உங்கள் ஆடு மாடுகளை கஷ்டப்பட்டு வளர்க்கும் எனக்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடன் இதுதானா என்று அந்த செருப்பை அவரிடமே திருப்பி கொடுத்தேன்.

இப்பொழுது நேரில் அவரைப் பார்க்க சந்தர்ப்பம் இருக்கிறது அதனால் அவரிடம் எப்படியாவது ஒரு செருப்பை வாங்கிக்கொள்ள வேண்டும், செருப்பு இல்லாமல் என் கால்கள் தேய்ந்து விட்டது.

ஊரில் அவர் பெரும் வியாபாரி என்பதால் அவரின் வீட்டை கண்டுபிடிப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ஏன் இப்படி பொறுப்பில்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்தாய், என் ஆடு மாடுகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற அக்கறைதான் அவருக்கு மேலோங்கியிருந்தது.

அவர் வேறு ஒரு சொந்தக்காரரிடம் என்னைப் பற்றிய தகவல்களை என் அப்பாவிடம் தெரிவிக்குமாறு சொல்லிக்கொண்டிருந்தார். இங்கேயே இருந்தால் என் அப்பா இங்கே வந்து என்னை கூட்டிக் கொண்டு சென்றுவிடுவார். அதனால் அங்கு இருந்து தப்பிக்க முயற்சி செய்தேன், ஆனால் எங்கு செல்வது என்று குழப்பம் பின்பு என் அக்காவிடம் சென்று விடலாம் என்று யோசித்தேன். ஆனால் அவர் இருப்பிடம் எங்கே என்று எனக்கு தெரியாது, அதனால் மாலை வரை காத்திருந்தேன்.

மாலை என் மாமாவின் மகன்கள் பள்ளியில் இருந்து வந்தார்கள். அவர்களிடம் என் நிலைமையை எடுத்துக்கூறி தயவு செய்து என்னை காப்பாற்றுமாறு அவர்களிடம் கெஞ்சினேன். அவர்களுக்கு என் அக்காவின் இருப்பிடம் தெரியும். நன்கு படித்த சிறுவர்களாக அவர்கள் இருப்பதால் என் நிலைமையை புரிந்து கொண்டு என் அக்காவின் வீட்டிற்கு செல்வதற்கான வழியையும் அவர்கள் சொன்னார்கள். அவர்களிடம் நன்றியை தெரிவித்து விட்டு நான் எங்கு போகிறேன் என்று யாரிடமும் சொல்லாதீர்கள் என்று அவர்களிடம் வாக்குறுதியை பெற்றுக் கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன்.

மீண்டும் நீண்ட தூர பயணத்திற்கு பின்பு என் அக்காவின் வீட்டை கண்டுபிடித்தேன். என்னை பார்த்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவள் கேட்ட முதல் கேள்வி ஏன் பொறுப்பில்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்தாய், நீ இல்லாமல் அம்மா எவ்வளவு கஷ்டப் படுவார்கள் என்று கேட்டாள். நானும் அதே கேள்வியை கேட்கலாம் என்று தான் யோசித்தேன். இவள் வீட்டை விட்டு ஓடி வரும்போது அந்த அக்கறை இல்லையா என்று? ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவளின் உதவி எனக்கு மிகவும் தேவை, அதனால் வாயைப் பொத்திக் கொண்டு இருந்தேன்.

அவள் கர்ப்பமாக இருந்தாள், அதனால் அவளுக்கு பணிவிடை செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது என்று அவளிடம் ஒரு வேலைக்காரியை போல் இருந்தேன்.

சில மாதங்களில் அவள் என்னை அடிமை போல் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை, அதனால் அவளிடம் சொல்லாமலேயே அந்த வீட்டை விட்டு வெளியேறி என் சித்தி வீட்டிற்கு சென்றேன்.

சித்தி வீட்டிலும் மரியாதை இல்லை. அதனால் என் அத்தை வீட்டிற்கு சென்றேன். படிக்காத ஒரு காரணத்தினால் எனக்கு எங்கு சென்றாலும் வேலைக்காரி வேலை மட்டும்தான் கிடைத்தது.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, என் அத்தையின் சொந்தக்காரர் ஒருவர் சோமாலியா நாட்டின் அரசு தூதுவராக வேலை புரிந்தார். அவர் லண்டனுக்கு வேலை நிமித்தமாக நான்கு வருடம் செல்ல இருந்தார். அவருக்கு வீட்டு வேலை செய்வ ஆள் தேவைப்பட்டதால், என் அத்தையிடம் யாராவது வீட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பார்களா என்று கேட்டார். என் அத்தையும் யாராவது இருந்தால் சொல்வதாக அவருக்கு உறுதி அளித்தார்.

அவர் சென்றதும் என் அத்தையிடம் கெஞ்சி என்னை தயவு செய்து அவருடன் லண்டனுக்கு அனுப்புமாறு கெஞ்சினேன். அவரும் அதற்கு சம்மதித்தார். விரைவில் அந்த அரசு தூதுவர் எனக்கு ஒரு பாஸ்போர்ட் எடுத்தார். என் வாழ்க்கையில் எனக்காக எடுக்கப்பட்ட முதல் ஆவணம் அந்த பாஸ்போர்ட். என் முகத்தை அந்த பாஸ்போர்ட்டில் பார்க்கவே எனக்கு ஆனந்தமாக இருந்தது.

லண்டன் எனக்கு சொர்க்கபுரியாக தெரிந்தது. இவ்வளவு சுத்தமான இடம், இவ்வளவு குளுமையான சூழல், இவ்வளவு வெள்ளையான மனிதர்களை நான் பார்த்ததே இல்லை.

இடம் மாறினாலும் என் வாழ்க்கை மாறவே இல்லை. அதே அடிமை வாழ்க்கை. வீட்டு வேலை, குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுசெல்வது வருவது இப்படியாக போய் கொண்டு இருந்தது.

அப்படி குழந்தைகளோடு பள்ளிக்கு சென்று வரும்போது அங்கு வாசலில் ஒரு ஆண் தினமும் எனக்காக காத்து இருப்பான். என்னை பார்த்து சிரிப்பான், பேசுவதற்கு முயற்சிப்பான். சிலநேரம் என் அருகில் வந்து ஏதோ சொல்லுவான். எனக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால், அவன் என்ன சொன்னான் என்று புரியவில்லை. ஒரு நாள் அவன்தன்னுடைய விசிட்டிங் கார்டை என் கையில் திணித்து விட்டு சென்றுவிட்டான்.

இப்படியாக அந்த அடிமை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது, நான்காவது வருடம் முடியும் தருவாயில். எனது சொந்தக்காரரான அந்த சோமாலியா நாட்டின் அரசு தூதுவர் வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இருக்கையில், அந்த அதிர்ச்சிகரமான தகவலை சொன்னார். அதாவது அவரின் பதவிக் காலம் முடிந்து விட்டதால், நாம் நம் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றார்.

எனக்கு லண்டனை விட்டு செல்ல இஷ்டமில்லை. மறுபடியும் சோமாலியா நாட்டுக்கு சென்றால், இதே அடிமை வாழ்க்கை தான் மிஞ்சும், அதனால் என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, இந்த நாட்டை விட்டுச் செல்லக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

சரியாக ஊருக்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு என் சொந்தக்காரரிடம் என் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறினேன். என்னை கண்டபடி திட்டினார். நானும் அவரிடம் கோபமாக என்னை பற்றி கவலைப்படாதீர்கள், நான் செத்தாலும் பரவாயில்லை என் பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு விறு விறு என்று அந்த வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கு போகப் போகிறோம் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் கால் போன போக்கில் சென்றேன்.

இரவு நெருங்கிவிட்டது நான் இருந்த இடம் பரபரப்பான ஒரு வணிக வளாகம். அங்கு மெக்டொனால்டு உணவகத்தில் எங்க ஊரு பெண்ணை பார்த்தேன். அவளிடம் என் நிலையை விளக்கினேன், அவள் என் மீது இரக்கப்பட்டு அவள் எனக்கு அங்கு வேலை வாங்கி தருவதாக கூறினால். எனக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. அப்படி இருக்கையில் நான் என்ன வேலை செய்ய முடியும் என்று அவளிடம் கேட்டேன், அதற்கு அவள் அதனால் என்ன, தட்டை கழுவுவது, டேபிளை சுத்தம் செய்வது போன்ற வேலையை பார்த்துக்கொள் என்று எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சந்தோஷம் என் தோழியின் மூலமாக கிடைத்தது. அதாவது அவருக்கு தெரிந்த மருத்துவரை அணுகி எனக்கு சிறுவயதில் நடந்த கொடுமைகளை விளக்கி, எனக்கு அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் என்னால் ஒரு மிகப் பெரிய காரியம் செய்ய முடிந்தது. அது என்னவென்றால் என்னால் நிம்மதியாக சிறுநீர் கழிக்க முடிந்தது. நான் வாழ்க்கையில் பரவசமடைந்த நாள் எதுவென்றால் அது நாள் தான். ஒரு நிமிடத்திற்குள் செய்யவேண்டிய காரியத்தை இவ்வளவு வருடமாக நான் அதை அரைமணிநேரம் செய்து கொண்டிருப்பேன், சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவதை வலியுடனும், வேதனையுடனும், பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.

இவ்வளவு நாள் அந்த சிறுநீர் கழிப்பது என்பது எனக்கு அவ்வளவு பெரிய காரியம்.

சிறிது நாட்களில் நாங்கள் நெருங்கிய தோழிகள் ஆனோம். அப்பொழுது ஒருமுறை பள்ளியில் எனக்கு நேர்ந்த ஒரு விஷயத்தைக் கூறினேன். அந்த ஆண் கொடுத்த விசிட்டிங் கார்டை அவளிடம் காண்பித்தேன். அந்த விசிட்டிங் கார்டை பார்த்த என் தோழி ஆச்சரியத்துடன் இவர் யார் தெரியுமா, இவர் ஒரு புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் என்றார்.

ஒரு புகைப்பட நிபுணர் என்னிடம் பேச என்ன இருக்கிறது என்று என் தோழியிடம் கேட்டேன்? அதற்கு அவள், இதை நீ அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றாள். எனக்கு தான் ஆங்கிலம் தெரியாதே... அதனால் நீயே அவரிடம் பேசி, என்ன விஷயம் என்று கேட்டு என்னிடம் சொல் என்று அவளிடம் கூறினேன்.

மறுநாள் என் தோழி அவரிடம் பேசிவிட்டு ... என் முகம் அவ்வளவு அழகாக இருக்கிறது என்றும், ஒரு ஆப்பிரிக்க பெண்மணியைத் தான் அவர் தேடிக் கொண்டிருக்கிறாராம். உலகப் பிரசித்தி பெற்ற ஒரு காலண்டர் தேவைக்காக, ஒரு ஆப்பிரிக்க பெண் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

அதிலிருந்து சூடுபிடித்தது என் வாழ்க்கை ஆமை வேகத்தில் சென்ற என் வாழ்க்கை அதற்கு அப்புறம் நிற்கக்கூட நேரமில்லாமல் ராக்கெட் வேகத்தில் சென்றது.

அந்தப் புகைப்பட நிபுணர் எடுத்த புகைப்படத்தால் சிறிது பிரபலம் அடைந்தேன். அதற்குப் பிறகு உலகப் பிரசித்தி பெற்ற புகைப்படக்காரர் "Terence Daniel Donovan" மூலம் உலகத்தின் கவனத்தை பெற்றேன். அதன்பிறகு உலகத்தின் பிரபல மாடலான நவோமி கேம்பல் (Naomi Campbell), சின்டி (Cindy Crawford) போன்றவர்களுடன் வேலை செய்தேன். பின்னாளில் நானே ஒரு பிரபலமான மாடல் அழகியாக கருதப்பட்டு, பின்னாளில் பிபிசி என்னை வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்கும் அளவுக்கு உயர்ந்தேன்.

என் மாடல் துறைக்கு வசதியாக இருக்கும் என்ற காரணத்தினால், என் இருப்பிடத்தை லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றேன்.

என்னை வைத்து பிபிசி ஆவணப்படம் எடுக்க முயற்சி செய்து என்னை அணுகியது. நான் அப்போது மாடல் துறையில் மிகவும் பிசியாக இருந்ததால் அதை நான் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.

அவர்கள் விடாப்பிடியாக என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் எடுக்கப்போகும் ஆவணப்படம் சோமாலியா நாட்டின் வறுமையை பற்றியும், அங்கு வாழும் மக்களை பற்றியும். அதற்கு நான் சரியான பெண்மணியாக இருப்பதால் அவர்களை என்னை விடுவதாக தெரியவில்லை.

பின்பு அவர்களுக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் ஒத்துக் கொண்டேன். நான் வீட்டை விட்டு ஓடி வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பதினைந்து வருடங்களில் வாழ்க்கையில் நிறைய மாறிவிட்டது. சோமாலியா நாட்டில் ஏற்பட்ட போர் நெருக்கடியால் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு எங்கெங்கோ சென்று விட்டனர். அதனால் நான் பிபிசிக்கு வைத்த ஒரே நிபந்தனை, என் அம்மாவை கண்டுபிடித்து தந்தால், நான் அந்த ஆவணப் படத்தில் நடிப்பதாக கூறினேன்.

மிகப்பெரிய சிரமத்திற்குப் பின் அந்த பிபிசி குழு என் தாயாரை கண்டுபிடித்தது. என் தாயாரை பார்க்க எத்தியோபியா நாட்டிற்கு சென்றேன். போர் காரணத்தினால் சோமாலியா மக்கள் எத்தியோப்பியாவில் தஞ்சமடைந்தனர்.

எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் என் தாயார் என்னுடன் அமெரிக்கா வர சம்மதிக்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம், உன் தகப்பனார் பொறுப்பில்லாமல் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டு அதன் மூலமாக ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் மற்றும் இந்த மக்களை பிரிய எனக்கு மனமில்லை இவர்களுடன் வாழவே நான் ஆசைப்படுகிறேன் என்றார்.

தன் இன மக்களுடன் தான் அவர் வாழ ஆசைப்படுகிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

பின்பு நான் அமெரிக்கா சென்றவுடன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் பின்பு அவர் மூலம் இரு குழந்தையும் பெற்றுக் கொண்டேன்.

இந்த நிலையில்தான் நான் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியின் மூலமாக, என் வாழ்க்கையை மக்களுக்கான வாழ்க்கையாக மாற்ற உதவி செய்தது.

சடங்கு என்ற பெயரில் சோமாலியா நாடு மற்றும் அதை சுற்றி உள்ள நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அந்த கொடூர பழக்கத்தை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்தது அந்த பேட்டி.

கத்திகளாலும், பிலடுகளாலும், கத்திரிக்கோல் மற்றும் கூர்மையான கற்களாலும் பெண்களின் பிறப்பு உறுப்பை அறுத்து, அதுதான் கன்னித்தன்மை என்ற நடந்த கொடூரத்தை நான் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தேன்.

இந்தப் பேட்டியைப் பார்த்த ஐநா சபை உறுப்பினர்கள் மனித உரிமையைக் காக்க என்னை சிறப்பு தூதராக 1997இல் நியமித்தனர்.

வியன்னாவில் "த பிளவர் பவுண்டேஷன்" என்ற தன்னார்வ நிறுவனத்தை நான் தொடங்கி உலகமெங்கும் இந்த FGM (Female Genital Mutilation) எதிரான எங்களின் நோக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இன்று பெருமளவில் அது குறைந்தாலும் முழுவதுமாக நீங்கி விட்டது என்றால் இல்லை என்பதுதான் என் பதில்.

0 comments: