-

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan


சமீபத்தில் திரை இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இன்னமும் என்னுடைய தலைமுறையை சேர்ந்த பல இளைஞர்கள் இந்த அற்புத நாவலை படிக்காமல் இருப்பது வருத்தமான விஷயம். அதை கருத்தில் கொண்டு இந்த நாவலை பற்றி சிறு குறிப்பும், முழு நாவலை தரவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த பதிவு உதவும். பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.


இப் புதினம், புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.


பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.

விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.

முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராய்ப்பள்ளி அளவிலேயே நின்றது.

இந்தக் காலக்கட்டத்துற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்தப் பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது.காட்டுமன்னார்கோயில் அருகில்."விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

இந்தக் காலக்கட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.வரலாற்றில் இடம்பெறும் முக்கிய பாத்திரங்கள்

* வந்தியத்தேவன்
* குந்தவை
* அருள்மொழிவர்மன்
* சுந்தர சோழர்

* நந்தினி - எதிர்மறையான பாத்திரம். சோழப்பேரரசை வீழ்த்தி தானே அரசாள்வதற்கு சதித்திட்டம் தீட்டும் ஒரு பெண்ணாக நந்தினி காட்டப்பட்டிருப்பாள்.
* ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர். ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது.
* அநிருத்தப் ப்ரும்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார்.
* வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள்
* பழுவேட்டரையர்
* செம்பியன் மாதேவி
இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்த்தென்று சொன்னால், அது சிறிதும் மிகை ஆகாது.

இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள்.

எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.

இந்த அற்புத காவியத்தை முழு நாவலாக படிக்க இங்கே தரவிறக்கம் செய்யவும். இது ஒரு இலவச புத்தகம்.

6 comments:

Anonymous said...

பொன்னியின் செல்வன் இருபதாம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு காவியம். அதற்காக கல்கிக்கு எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் அது போதாது.. ஆனால் அவற்றைத் திரைப்படமாக எடுத்துக் கொச்சைப்படுத்த முயலும் மணி ரத்தினத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது ... தமிழர்களின் காவியத்தை 3 மணி நேர சினிமாவில் காட்ட முடியுமா? அப்படியே முடிந்தாலும் உலகத் தரத்தில் இருக்குமா? விஜய் போன்றோரை நடிக்க வைத்து கேவலப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை .....

சி.பி.செந்தில்குமார் said...

மணிரத்னத்துக்கு இது இன்னொரு இருவராக அமையும்

சக்தி கல்வி மையம் said...

நானும் ரொம்ப எதிர்பார்க்கிறேன்..

Anonymous said...

super

Chitra said...

அதை படமாக்குவது பெரிய சவால்தான்...வாசகர்கள் ஒவ்வொருவர் மனதிலும், ஒவ்வொரு விதமாக காட்சி அமைப்பு கற்பனையில் விரிந்து இருக்குமே..

Speed Master said...

பகிர்விற்கு நன்றி

மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது