-

கண்ணுக்குத் தெரியா கடவுள்

மண்ணுயிர் காக்கும் கடவுள் எனலாம் நுண்ணுயிரை
வெறும் கண்ணுக்கு புலப்படாததாலும்
அங்குமிங்குமெங்கும் நிறைந்திருப்பதாலும்
காத்தல், அழித்தல் இவ்விரண்டையும் கடனே செய்திருப்பதாலும்!

மண்ணுயிருள் மாண்புமிகு மானிடன் எனலாம் நுண்ணுயிரை
விருந்தினன் போல் மெல்ல நுழைந்து பின்
அடிமை சாசனம் நீட்டுவதாலும்

மற்றொரு உயிரை உறிஞ்சி உடல் வளர்த்து உயிர் வாழ்வதாலும் தன் இனத்தினை கூண்டோடு அழிக்க தானே விஷம் சுரப்பதாலும் அப்பாவி, சந்தர்ப்பவாதி, கொடூர ஆட்கொல்லி எனப்
பல வேடம் பூணுவதாலும்

நித்தம் ஐந்து முறை கை அலம்பும் சுத்தக்காரன் அறியான்
தன்னுடல் கோடானு கோடி நுண்ணுயிர் சுமக்கும்
ஓர் உயிரியல் பூங்கா என்று
முத்தமிட்டு மோகம் கொள்ளும் காதலர்கள் அறியார்
இதயங்களுடன் பாக்டீரியாக்களையும் பரிமாறிக்கொள்கிறோம் என்று

கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலக்காமல் செரிக்கும்
காகம் கூட தீண்டாத எதனையும் உண்டு மக்கச்செய்யும்
தாவரங்களை பூச்சிகளிடமிருந்து காத்து, நைட்ரஜன் ஊட்டும்
மல்லிகைப்பூ இட்லியும், மதிமயக்கும் மதுவும் அளிக்கும்
மனித இனத்தின் சராசரி ஆயுட்காலத்தை நீட்டித்த
பெனிசில்லின் சுரக்கும் கல் தோன்றி மண் தோன்றா
காலத்தே தோன்றிய மூத்த உயிராம்
நுண்ணுயிரின்றி ஓரணுவும் அசையாது அவனியிலே


Source - Thanx to source

0 comments: