-

சேனல் 4 வெளியிட்ட இசைப்ரியாவின் மரண வீடியோ

லண்டன்: வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.


இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 நேற்று வெளியிட்டது. பார்ப்பவர்களை கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர்.

வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வை பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது, ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் வெளிவந்தவண்ணம் உள்ளது.

இந்த காட்சிகள் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நெஞ்சை பதறச் செய்து வருகிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி அம்பலப்படுத்தி வருகிறது.

இந்த கோரங்கள் அனைத்துக்கும் முக்கிய காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டனில் தங்கியுள்ள நிலையில், அதே நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4, புதிய வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பியது.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட ரவிப்பிரியா என்ற சிங்கள பெண் ராணுவ அதிகாரியின் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த சிங்கள ராணுவத்தினர் தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியினர் அத்தனை பேரையும் கற்பழித்துக் கொன்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் தெரிகிறது.

இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே, "இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உளவுத் துறை வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இசைப் பிரியா சிதைக்கப்பட்டதாகவும்" செய்தியைப் பரப்பியது ராணுவம். போர்க்குற்றத்திலிருந்து தப்பிக்க இந்த உத்தியைக் கையாண்டுள்ளனர்.

ஊடகங்களும் ஏமாந்து போய் இந்தத் தகவலை வெளியிட்டுவிட்டன. ஆனால் உண்மையில் இப்படி நடக்கவில்லை.

நிராயுதபாணியாக நின்ற செய்தியாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்கவே அவரை பெண்புலியாக சித்தரித்து செய்தி பரப்பியுள்ளனர் சிங்களத் தரப்பில்.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக பார்த்தால் அவர் ஒரு நிராயுதபாணியாக இருப்பது தெரியவரும்.


"சிங்களத்தின் பரப்புரைகளை நம்ப வேண்டாம். செய்தியை ஆய்வு செய்த பிறகே வெளியிடவும். இசைப்பிரியா ஒரு நிராயுதபாணி. அதுமட்டுமல்ல, அவர் ஒரு இசைக் கலைஞர், செய்தியாளர், படங்களில் நடித்தவர்... இத்தகைய ஒருவரை ராணுவத்தினர் வெறியுடன் கற்பழித்து கொன்றுள்ளனர்.. இது மிகப் பெரிய போர்க்குற்றம் என்பதை தமிழர் ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன
Source: Thatstamil