-

விதைத்தது நீயாக இரு



பரந்து விரிந்த வானில் வியாபித்துக் கிடக்கும் மேகம் போல.. நம் மனதிலும்.. ஆசைகள் ஆயிரம் இருக்கும். அதை செயல்படுத்தும் வழிகளை தேடும் கண்களுக்கு விருந்தாக அமைய சின்னதாய் ஒரு பயணம் மேற்கொள்வோமா நண்பர்களே! 

பொதுவாக நாமளும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கனும் என நம்ம மனசு துடிக்கும். அதிலும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்துல ஈடுபாடும் அதிகமா இருக்கும். ஆனா பாருங்க ஏதோ ஒரு தயக்கம் அடி மனசுல இருந்துகிட்டேதாங்க இருக்கு. எதற்கு இந்த தயக்கம்... சின்னதா ஒரு உதாரணம் பார்ப்போமா! 


 ஒரு வழிப்போக்கன் ஒரு ஊருக்கு போனாராம். அந்த ஊரே பார்ப்பதற்கு ஒரு காடு போல கட்சியாளித்ததாம். ஆள் நடமாட்டம் கூட இல்லையாம். அவருக்கே நடக்க நடக்க ரொம்ப போராகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததாம். என்னடா இது என்று குழம்பிப் போன அவர், அந்த அலுப்பைப் போக்க கையில் இருந்த பழத்தை சாப்பிட்டுகிட்டே போனாராம். அப்படி போகும் போது பழத்தின் விதையை ஆங்காங்கே நின்னு கீழே போட்டுட்டே போனாராம்.

இப்படியாக ஒரு வழியாக அந்த ஊரை கடந்து போய்ட்டாரம். ஆத்தாடி. இனிமே திரும்ப இந்த ஊருக்கே வரக்கூடாதுப்பா அப்படினு நினைச்சாராம். ஆனால் நேரம் சும்மா இருக்குமா.. இருக்காதே.. திரும்பவும் சில காலம் கழித்து அதே ஊருக்கு செல்லவேண்டிய சூழ்நிலை வந்தது.. ஆஹா.. அந்த ஊருக்கா போகணும் என்று விரக்தியாகி விட்டாராம். ஆனால் வேறு வழியில்லாததால், வெறுப்புடன் மீண்டும் அதே ஊருக்குள் சென்றாராம்.

ஆனால் ஊருக்குள் போகப் போக அவருக்குள் ஆச்சரியம் அடி மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.. கொஞ்சம் கொஞ்சமாக வியப்பு மேலிட ஆரம்பித்தது.. காரணம் அந்த ஊர் அப்படி அடியோடு மாறிப் போயிருந்தது. ஆங்காங்கே மரங்கள்.. அது தரும் நிழல்.. அதன் கீழே ஓய்வில் மனிதர்கள்.. கூடவே நிறைய கடைகள்.. என ஊரே மாறிப் போயிருந்தது.

என்னடா இது.. அந்த ஊரா இது என்று இவர் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டார். காடு மாதிரி இருந்த ஊர் எப்படி இவ்வளவு அழகானது என்று அவருக்குப்புரியவில்லை. அதே யோசனையிலே ஒரு மரத்துக்கு கீழே கொஞ்ச நேரம் உட்கார்ந்தராம். அப்போ அந்த மரத்திலிருந்து ஒரு பழம் விழுந்துதாம். அதை அவர் உண்ணும்போது தான் அவருக்கே ஒரு விஷயம் புரிந்தது.. ஆஹா, இது நாம அன்னிக்கு சாப்பிட்ட அதே பழத்தின் சுவையாச்சே என்று யோசித்த அவருக்குள் ஓங்கி ஒரு மணி அடித்தது.. அடடா.. நாம அன்று சாப்பிட்டு போட்ட விதையில் முளைத்த மரங்களா இவை என்று மனம் நெகிழ்ந்தாராம்.

 இவ்வளவுதாங்க வாழ்க்கை.. நாம் தயங்கி நிற்கும் தருணம் யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது என்பதை மறவாதீர்கள். நாம் நினைப்பது சரியோ, தவறோ, செய்வது சரியோ, தவறோ.. ஆனால் எதையும் யோசிக்காமல் உடனே செயல்படுத்த பாருங்க. அது நமக்கு பயன்படுதோ இல்லையோ, யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.


நீ நட்ட மரத்தின் நிழல்களை கடந்து செல்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் விதைத்தது நீயாக இரு!

0 comments: