-

சலார் ஜங் அருங்காட்சியகம்

   சலார் ஜங் அருங்காட்சியகம் இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் மூசி ஆற்றின் தென்கரையில் உள்ள தார் உல் சிஃபாவில் அமைந்துள்ளது. இது ஒரு கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கே யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமும், ஒரு மனிதனால் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களின் தொகுதிகளில் உலகிலேயே மிகப்பெரியதும் இதுவாகும். கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நாகரிகங்களையும் சேர்ந்த மதிப்பு மிக்க சேகரிப்புக்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.



   ஐதராபாத்தின் ஏழாவது நிசாமின் பிரதம அமைச்சரான மூன்றாம் நவாப் மிர் யூசுஃப் அலி கான் சலார் ஜங் (1889-1949) தனது வருமானத்தில் குறிப்பிடத் தக்க அளவைச் செலவு செய்ததுடன் 35 ஆண்டுகள் முயன்று இந்த அரும் பொருட்களைச் சேகரித்தார். அவரது முன்னோரது மாளிகையான திவான் தேவ்டியில் அவர் விட்டுச்சென்ற இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி முதலில் அந்த மாளிகையிலேயே ஒரு தனியார் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது.

   இதனை 1951 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். சலார் ஜங் சேகரித்த பொருட்களில், இப்போது இருப்பது பாதியளவே எனப் பலர் கருதுகிறார்கள். இவர் மணம் செய்து கொள்ளாது தனியே வாழ்ந்ததால் இப் பொருட்களின் பாதுகாப்புக்கு அவர் தனது அலுவலர்களையே நம்பியிருந்தார். ஆனால் அவர்கள் அவற்றில் பலவற்றை எடுத்துக் கொண்டு போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மேலும் சில பொருட்கள், திவான் தேவ்டியில் இருந்து பொருட்களை இப்போதுள்ள கட்டிடத்துக்கு மாற்றும் போது தொலைந்தோ களவுபோயோ விட்டதாகத் தெரிகிறது. இந்த அருங்காட்சியகம் 1968 ஆம் ஆண்டில் இப்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. இது 1961 ஆம் ஆண்டின் சலார் ஜங் அருங்காட்சியகச் சட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுனரைப் பதவிவழித் தலைவராகக் கொண்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படுகிறது. கீழே அதன் தளம்.

http://www.salarjungmuseum.in/

0 comments: