-

விவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
உண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல.
நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து நான் இதுவரை எதையும் பார்க்க வில்லை வறுமையை தவிர.. உழைத்து உழைத்தே உடல் வழி தீர்க்க புகைபிடித்து பலியானார் தந்தை, மிச்ச உயிரையும் உருக்கி படிக்க வைத்தார் என் தாய்.
நானும் நகரம் நோக்கி சென்று விடும் நிலையில் இருந்தேன் . ஈரோடு மாவட்டத்திலே வேலை கிடைக்கா விட்டால், நானும் பெங்களுர், சென்னை என்று வீணாய் போயிருப்பேன். என் மண்ணை விட்டு நகர எனக்கு விருப்பமும் இல்லை.
போட்டோவ பார்த்து நான் என்னவோ முத்தம் கொடுக்க போறதா நினைக்காதிங்க.. என் பங்காளிகிட்ட 'இருடா சிரிகறேன்'னு சொல்றதுக்குள்ள போட்டோவ எடுத்துட்டான் பயபுள்ள.

இப்போதும் விவசாயம் செய்வதில் எனக்கு பெருமை மட்டுமே மிஞ்சுகிறது. M.Sc [IT] படித்திருப்பதால் வேலை கிடைக்கபோய் மூன்று வேலை உணவும் இப்போது நிச்சயமாகி விட்டது. ஆனால், நான் பிறந்ததில் இருந்து இன்று வரை எனக்கு உணவளித்தது எங்கள் வயலில் விளைந்தவையே. எனக்கு கிடைத்த பாக்கியம் என் வாரிசுகளுக்கு இல்லாமல் போய்  விடுமோ என்று மனம் அஞ்ச துவங்கி பல வருடங்கள் ஆகி விட்டது. 

உண்மையில் இப்போது விவசாயம் செய்ய ஆளில்லை  என்பதே உண்மை.. வயலை விற்று காசாக்கி பிள்ளைகளுக்கு வழமையான எதிர்காலம் உருவாக்கவே இப்போது விரும்புகின்றனர் பெற்றோர். எங்கள் ஊரில் கூலி வேலை செய்யவே வடமாநில ஆட்கள் தான் அதிகம்.. இன்னும் சில நாட்களில் இங்கே தமிழர்களே இருக்க மாட்டார்கள்.  அவர்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. நம்முடைய மக்களோ இலவசத்தை அதிகம் எதிர்பார்த்து உழைக்க மறுப்பதே இப்போது அன்றாட வேலையாகிபோனது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு தளத்தில் நான் படித்த சில வரிகள், என்னுடைய எண்ணவோட்டத்தில் ஒன்றாக பயணிப்பது போல உணர்ந்தேன். அதையும் உங்களோடு பகிர விரும்புகிறேன்.

"போகிறபோக்கு இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவில் உணவு உற்பத்தியும் இதர விவசாய விலைபொருள்களின் உற்பத்தியும் குறைந்துகொண்டே போய் உணவுப் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக அரசின் புள்ளி விபரங்களே காட்டுகின்றன" என்று அனலிஸ்டுகள் கணிக்கிறார்கள். 

நாட்டு மக்களுக்கு உணவு முக்கியமா? அல்லது உலக வியாபாரசந்தையோடு விளையாடும் பொருளாதார வளர்ச்சி முக்கியமா? என்ற கேள்விக்கு விடை காணவேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம்.  ஊருக்கெல்லாம் சோத்தை போட்டுவிட்டு அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாமல் தவிக்கும் வறுமையின் சொந்தகாரர்கள் இந்த விவசாயிகள். ஓரிரு மாதங்களாக தலை சுற்றி தள்ளாடிக் கொண்டிருந்து, சென்ற வாரத்தில் கடுமையான சீதபேதி ஏற்பட்டு பங்குச்சந்தை (share market) படுத்துவிட்டது. நமது பொருளாதாரம் வளர்ந்து வல்லரசு ஆகிவிடுவோம் என்ற பொய்யான கனவுகளை ஏற்படுத்திய பங்குச்சந்தையின் கதை வெத்துவேட்டு ஆகிவிட்டது. இதற்கு காரணம் வெளிநாடுகளில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சரிவுதான் காரணம் என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். 

சென்சக்ஸ் மேலே போகும்போது அது எங்களால்தான் என்று மார்தட்டிக் கொண்டவர்கள் அது கீழே இறங்கும்போது அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. திசைதிருப்பி வேறொரு காரணத்திற்கு சென்றுவிடுகிறார்கள்."அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என்று சொல்லிச்சொல்லி நாமும் மரத்துப்போய்விட்டோம்.அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கிகளும் நிதிநிலையங்களும் நஷ்டங்களைச் சமாளிக்க முடியாமல் மஞ்சள் கடுதாசி கொடுத்து ஒன்றன்பின் ஒன்றாக திவாலாகி வருகின்றன. அதனுடைய தாக்கம் இந்திய மார்க்கெட்டிலும் இடி போன்று விழுந்தது. 
அங்கே நிலைமையை எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள டில்லியிலிருந்து வாஷிங்டனை எட்டிப் பார்த்தார்கள். அமெரிக்க அரசு 70 ஆயிரம் கோடி டாலர்களைக் கொடுத்து திவாலாகிப்போன நிதி நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த முயற்சிப்பதைக் கண்டார்கள். உடனே நமது ஆட்சியாளர்கள் இங்கே 60 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய தொகுப்பிலிருந்து Liquidity க்காக நிதி நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் இங்கு எந்த நிறுவனமும் திவாலாகும் நிலைமையில் இல்லை. 

நன்றாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்து பங்கு மார்க்கெட்டில் விளையாடவிட்டிருக்கிறார்கள். பங்குச் சந்தையில் லிக்விடிட்டிக்காக கொடுத்துள்ள பணம் குறிப்பிட்ட 100 கம்பெனிகளுக்கல்லாமல் மற்றவர்களுக்குப் போய்ச்சேராது. இந்த கார்பொரேட் நாடகத்தில் இந்திய மக்கள் தொகையில் லட்சத்தில் ஒருவர்கூட பங்கேற்கமாட்டார்கள். இவர்களுடைய பணப்பசிக்காகவே இந்திய அரசு செயல்படுகிறது. இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் 70% எழுபது சதவிகிதம் உள்ள விவசாயத்தை நம்பியுள்ள மக்களுக்குப் போய்ச் சேராது. 

அரசுகள் தலைமுறைகளாக விவசாயத்தை நம்பியுள்ள பெரும்பான்மை மக்களை உதாசீனம் செய்துவந்துள்ளது.அரசுகளின் பாராமுகத்தால் நிராதரவாகிப்போன விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தார்கள்; போராட்டங்கள் நடத்தினார்கள்; ஒன்றும் வேலைக்காகவில்லை. அரசு புண்ணுக்க புனுகு தடவினது போல செயல்பட்டது. யானைப்பசிக்கு சோளப்பொரி கொடுத்தது என்னவோ உண்மைதான். 

தொடர்ந்து விவசாயிகளை அரசு கவனிக்காமல் விட்டதால்விவசாயிகள் கடனில் மூழ்கித் தத்தளித்து மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அரசின் புள்ளிவிவர அறிக்கைகளே சான்று பகர்கின்றன.சமீபகாலமாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்துவதில்லை என்று முடிவெடுத்து வருகிறார்கள். அட, போராட்டம் வேண்டாம், பெட்டிசனாவது கொடுக்கலாம் என்றால் அதுவும் வேண்டாமென்று வெறுத்துப்போய் நிற்கிறார்கள். 

நாட்டு மக்களுக்கு அடிப்படைத்தேவை உணவு. அந்த உணவை உற்பத்தி செய்யும் பொறுப்பை கட்டுப்படியாகாமல் நஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பாரத்தை விவசாயிகள் மட்டும் சுமக்க வேண்டுமா? தங்களின் வாழ்க்கையையும் தங்கள் குடும்பத்தினரின் பிழைப்பையும் காவு கொடுத்துவிட்டு, எதிர்காலத்திற்கான எந்தவித வாழ்க்கைக்கும் உத்தரவாதமின்றி தாங்கள் மட்டும் ஏன் இந்த உணவு உற்பத்தி சுமையை சுமக்க வேண்டுமென்று கேள்வி எழுப்புகிறார்கள். 

கிராமங்களில் இன்றைய நிலையில் இளைஞர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக விவசாயத்தை விட்டு விட்டு வேறு சுழுவான வேலைகளைத்தேடி நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடிப்போய்விட்டார்கள். கிராமங்களில் சில கிழடுகள் (தப்பு - தப்பு - சீனியர் சிட்டிஸன்கள்) மட்டும் முள்ளுக்காடாகிப்போன விளைநிலங்களை பழைய ஞாபகத்தில் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.உணவு உற்பத்திக்கான விளைநிலங்களில் பாதி பரப்பளவு இன்று தரிசாக விடப்படும் நிலையில் இருக்கிறது. மீதி இடங்களிலும் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பற்றாக்குறை.
இந்தியாவில் ஓடும் நதிகளையெல்லாம் இனைத்து தமிழ்நாட்டில் தண்ணீரைப் பெருக்கி அதன்பிறகு உணவு உற்பத்தியைப் பெருக்கி சாதனை புரியப்போவதாக அரசியல்வாதிகள் அவ்வப்போது சொல்வார்கள். 

அந்த வேலையை இன்றே ஆரம்பித்தாலும் அது முடிய 10 ஆண்டுகள் ஆகலாம். (உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லவேந்தும். இந்த நதிகள் இணைப்பு எந்தக் காலத்திலும் நடக்கப்போவதில்லை) பிறகு ஒரு வேளை அதில் தண்ணீர் வந்தாலும் வரலாம்.ஆனால் --- 
வயலில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் வேறு தொழிலுக்கு போய்விட்டிருப்பார்கள்.பிறகு அரசு எப்படி அரிசி உற்பத்திசெய்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.மீண்டும் விவசாய வேலைகளுக்கு மனிதசக்தி தேவையென்றால் விவசாயியை மனிதனாக மதித்து கீழ்கண்ட கண்டிஷன்களை நிறைவேற்றித்தந்தால்தான் மீண்டும் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பார்கள். விவசாயிகள் விவரமடைந்துவிட்டார்கள். 

அவர்கள் கொடுக்கும் கண்டிஷன்கள்  (கவனிக்கவும் - அவை கோரிக்கைகள் அல்ல. கண்டிஷன்கள்)  

  • மீண்டும் நிலத்தில் பயிர் செய்ய வேண்டுமென்று அரசு விரும்பினால் உணவு உற்பத்தி செய்யும் விவசாயியின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். முதலிலேயே அவனுடைய குடும்பத்தாருக்கும் ஆயுள் இன்சூரன்ஸ் ரூ 100,000/- அதற்கு  அரசே பிரீமியம் செலுத்தவேண்டும்.
  • உணவு உற்பத்திக்கான உழவுப்பணிகளையையும் இதர பராமரிப்புப் பணிகளையும் ஆரம்பிக்க உற்பத்திக்கான மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 100000/- அட்வான்ஸ் கொடுக்கலாம். 
  •  உணவுப்பொருள் உற்பத்தி செய்தபிறகு அறுவடை சமயத்தில் உற்பத்தி போனசாக ஏக்கருக்கு 5000 ரூபாய் தரவேண்டும். 
  •  விளைவிக்கும் பொருள்களை அரசே மார்க்கெட் விலையில் வாங்கிக்கொள்ள வேண்டும். ஊழலைக் குறைக்க அரசே நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். 

இவை இல்லையென்றால் இனி விவசாயம் செய்ய இயலாது.
இவர்கள் இப்படிக்கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. அரசின் மொத்த வருமானத்தில் 80% பணத்தை மாதச் சம்பளமாக முழுங்கிக் கொண்டிருக்கும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் etc.... இவர்களுக்கு இதைவிட அதிகமாக அரசு சலுகைகள் காட்டிச் செல்லப்பிள்ளைகளாக வளர்த்துக்கொண்டிருக்கிறது. 

காலம் வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறது. அரசு விரைவாக செயல்படவில்லையென்றால் வருங்காலத்தில் நாம் வசிக்கும் இடத்தில் பாதி இடம் தமிழ்நாடாகவும் மீதி பாதி இடம் தமிழ் காடாகவும் இருக்கும்.பட்ட மரம் காய்ந்து சருகாகி போனது போல, விவசாயி என்ற இனமும் ஒருநாள் அழிந்தே போக போகிறது. நம்மால் எழுதுவதையும், படிப்பதையும், வேடிக்கை பார்பதையும் தவிர செயலில் இறங்க எப்போது முழு உரிமை கிடைக்கும் என்று தெரியவில்லை. 


12 comments: