-

வலைப்பதிவு - ஒரு நீண்ட வரலாற்று தகவல்

வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.



வலைப்பதிவுகளின் பொதுவான இயல்புகள்

அடிக்கடி இற்றைப்படுத்தப்படல்


பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச் சொல்லலாம். புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம் வலைப்பதிவுகளில் வெளியிடுவர். சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன.

இலக்கு வாசகர்கள்


அநேகமான வலைப்பதிவுகள், வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுகளுக்கும் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் இருக்கும்.

வாசகர் ஊடாட்டம்


தொழிநுட்ப அடிப்படையில் வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களை மறுமொழிகளாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். மறுமொழிகளை அடுத்து வரும் வாசகர்கள் பார்க்கக்கூடியதாயிருக்கும். தேவையேற்படும் பட்சத்தில் மறுமொழிகள் விடயத்தில் வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும்.

செய்தியோடை வசதி


வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப்பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக்கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம். இச்செய்தியோடை வசதியே, வலைப்பதிவுத் திரட்டிகளையும், வலைப்பதிவர் சமுதாயங்களையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

வலைப்பதிவொன்றின் பகுதிகள்


வலைப்பதிவொன்றில் பொதுவாக இருக்கக்கூடிய பகுதிகள் அல்லது உறுப்புக்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

வலைப்பதிவுத் தலைப்பு


வலைப்பதிவுகள் தமக்கென பெயரொன்றைக் கொண்டிருக்கும். இப்பெயர் வலைப்பதிவின் உள்ளடக்கம் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்கு சில வேளைகளில் கொடுக்கக்கூடும். பெரும்பாலும் வித்தியாசமான, கவரத்தக்க தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.

விபரிப்பு/சுலோகம்


வலைப்பதிவர், தனது வலைப்பதிவு பற்றியோ, அதன் நோக்கங்கள் பற்றியோ விவரிக்கும் ஓரிரு சொற்களை, வரிகளை இது கொண்டிருக்கும். சிலவேளை, விளையாட்டாக, நகைச்சுவைக்காகக்கூட இது எழுதப்பட்டிருக்கும். வலைப்பதிவர் விரும்பும் வாசகமொன்றாகக்கூட இது அமையலாம்.

பதிவின் தலைப்பு


ஒவ்வொரு பதிவும் (அல்லது பதிப்பிக்கும் ஆக்கங்களும்) தலைப்பொன்றினைக் கொண்டிருக்கும். வலைப்பதிவுத் திரட்டிகளில் உறுப்பினராக உள்ள வலைப்பதிவர்கள், இத்தலைப்புக்களை மிக கவர்ச்சிகரமாகவும், பதிவின் உள்ளடக்கத்தை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தும் விதமாகவும் அமைப்பர்.

பதிவு/உள்ளடக்கம்


இதுவே வலைப்பதிவில் அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் பகுதியாக இருக்கும். இவ்வுள்ளடக்கம் எழுத்தாக்கமாகவோ, ஒலி வடிவமாகவோ, சலனப்படக் காட்சியாகவோ, படமாகவோ அமையலாம். இவ்வுள்ளடக்கம் இணையத்தின் பொதுவான உள்ளடக்கங்களைப் போன்று மீயுரை வடிவங்களுக்கே உரித்தான பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கலாம்.

மறுமொழிகள்


பதிவின் உள்ளடக்கத்தைப் படிக்கும் வாசகர்கள் வலைப்பதிவொன்றில் பதிவுசெய்த மறுமொழிகள் இங்கே காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள மறுமொழிகளோடு, புதிதாக மறுமொழி இடுவதற்கான தொடுப்பும் அங்கே இருக்கும்.

இடுகைகளுக்கான தனிப்பக்கங்கள்


வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும் இடுகைகளை விட, ஒவ்வொரு இடுகைக்கென்றும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவ்விடுகைகளுக்கான மறுமொழிகளையும் அப்பக்கங்களில் காணலாம். அனைத்துப் பக்கங்களும் தமக்கெனத் தனியான முகவரிகளைக் கொண்டிருக்கும். இப்பக்கங்கள் வலைப்பதிவொன்றின் முகப்பில் தொடுப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக அண்மையில் எழுதிய பத்து, இருபது இடுகைகளின் தொடுப்புக்கள் தலைப்புக்களோடு முகப்பில் பட்டியலிடப்பட்டிருப்பதை வலைப்பதிவுகளில் காணலாம்.

சேமிப்பகம்


வலைப்பதிவு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தபட்டு வருவதால், முன்னர் எழுதிய பதிவுகள் முகப்புப்பக்கத்தில் இடம்பெறாமலோ, பட்டியலிடப்படும் தனிப்பக்கங்களில் கூட இடம்பிடிக்காமலோ போகலாம். அவற்றை வாசகர்கள் பார்ப்பதற்கும், வலைப்பதிவொன்றின் அத்தனை ஆக்கங்களும் பட்டியலிடப்படுவதற்கும் இத்தகைய சேமிப்பகங்கள் உதவுகின்றன. சேமிப்பகம் ஓர் அவிழ் பட்டியலாகவோ தனிப்பக்கமாகவோ, சாதாரண பட்டியலாகவோ இருக்கலாம். சேமிப்பகத்தில் பதிவுகள் மாதவாரியாகவோ, வார வாரியாகவோ பட்டியற்படுத்தப்பட்டிருக்கலாம்.

தொடுப்புகள்


வலைப்பதிவரது விருப்பங்களுக்கு ஏற்ப, வெளி இணையத்தளங்களுக்கான தொடுப்புகள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலதிக நிரற் துண்டுகள்


வலைப்பதிவரின் நிரலாக்க அறிவு, தேவை என்பவற்றைப் பொறுத்து பல சிறப்பான பணிகளை ஆற்றக்கூடிய நிரல் துண்டுகள் வலைப்பதிவொன்றில் சேர்க்கப்பட்டிருக்கலாம். வருனர்களின் எண்ணிக்கையை அறியவோ, அல்லது எழிலூட்டுவதற்காகவோ இவை பொருத்தப்பட்டிருக்கலாம்.


சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்களில் பலர், தமது வலைப்பதிவிலே அத்திரட்டியினால் வழங்கப்படும் சிறப்புப் பட்டை ஒன்றினைப் பொருத்தியிருப்பர்.

வலைப்பதிவோடு தொடர்புடைய தமிழ்க் கலைச்சொற்கள்


* வலைப்பதிவு; பதிவு
* வலைப்பதிவர்; பதிவர், வலைப்பதிவில் எழுதுபவர், இணையம் மூலமாக தனது கருத்துக்களையும், சிந்தனைகளையும் முன்வைக்கும் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஊடகவியலாளர்.
* வாசகர் - வலைப்பதிவினைப் பார்ப்பவர்கள்.
* பின்னூட்டம்/கருத்து / மறுமொழி - வாசகரால் வலைப்பதிவின்மீது செய்யப்படும் கருத்து வழங்கல்கள்.
* செய்தியோடை; ஓடை - - இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் பரிமாற உதவும் xml முகவரி
* தட்டெழுதல் - வலைப்பதிவுகளை விசைப்பலகை கொண்டு உள்ளிடுதல். "தட்டச்சு செய்தல்" என்ற பழைய சொல்லின் தொழிநுட்பரீதியான மருவல்.
* நிரலாக்கம் - ஆணைத்தொடர்களை எழுதுதல்
* நிரல் துண்டு - சிறப்பான தேவைகளுக்கென வலைப்பதிவொன்றில் பொருத்தப்படும் மேலதிக ஆணைத்தொடர். அநேகமாக ஜாவாஸ்க்ரிப்ட், HTML,XMl ஆக இருக்கலாம்
* வார்ப்புரு - template - வலைப்பதிவொன்றின் அத்தனை செயற்பாடுகளையும் கவனித்துக்கொண்டு, பின்னணியிலுள்ள php போன்ற வழங்கிசார் நிரலுடன் தொடர்புகளைப்பேணி வலைப்பதிவை ஆக்கும் சட்டகம்.இது css எழிலூட்டு நிரல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். வார்ப்புருவை மாற்றியமைப்பதன்மூலம் வலைப்பதிவொன்றின் வடிவத்தையும் செயற்பாடுகளையும் மாற்றியமைக்கலாம்.

* திரட்டி - வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை ஓரிடத்தில் திரட்டி, இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் காண்பிக்கும் வலைத்தளம், வலைச்செயலி.
* வலைப்பதிவர் சமுதாயம் - திரட்டிகள் மூலம் இணைந்து தம்முள் இடைத்தொடர்புகளைப் பேணும் வலைப்பதிவர்கள்.
* மட்டுறுத்தல் - பின்னூட்டங்களைப் பரிசீலித்து தேவையானவற்றை மட்டும் வலைப்பதிவில் தோன்றச்செய்தல் (எல்லாவகையான "பரிசீலிப்பின் பின்னான பிரசுரிப்பும்" இதனுள் அடக்கம்
* பதிவிடல் - உள்ளடக்கத்தினை வலைப்பதிவொன்றில் பிரசுரித்தல்.
* பெயரிலி/முகமூடி - தன்னை அடையாளப்படுத்தாது மறுமொழிகள் இடுபவர். தமிழ் வலைப்பதிவர் சமுதாயத்தில் பொதுவாகிப்போன சொற்கள்.(இப்பெயர்களை சில வலைப்பதிவாளர்கள் தமக்கு வைத்துக்கொண்டுள்ளனர்.)
* வழங்கி - வலைப்பதிவுகளுக்குத் தேவையான கோபுக்களை வைத்திருந்து இணையத்திற்குப் பரிமாறும் சிறப்புக் கணினி.
* வலைப்பதிவர் சந்திப்பு - வலைப்பதிவர்கள், தமது வலைப்பதிவர் அடையாளத்தை முன்னிறுத்திக் கூடுதல்.
* கூட்டுப்பதிவு/கூட்டு வலைப்பதிவு - ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பராமரிக்கப்படும் வலைப்பதிவுகள்.
* இடுகை - வலைப்பதிவில் உள்ளடக்கம் ஒன்றினை இடும் செயல் (வினை). வலைப்பதிவொன்றில் உள்ளிடப்பட்ட உள்ளடக்கம் (பெயர்)
* பின்தொடர்தல் - குறித்த இடுகை சார்ந்து எழுதப்படும் மறுமொழிகள், வெவ்வேறு இடங்களில் அதைத்தொட்டு எழுதப்படும் விடயங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் கணினியில் மென்பொருட்களின் உதவியுடன் தெரிவிக்கும் வசதி.
* வலைப்பூ - வலைப்பதிவு ஆரம்பமான காலத்தில் உருவாக்கப்பட்ட கலைச்சொல். இது வலைப்பதிவையே குறிக்கும். வலைக்குறிப்பு, வலைக்குடில் போன்ற சொற்களும் வழக்கத்திலிருந்தன. தற்போது வலைப்பதிவு என்பதே பொதுச்சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.



வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்குமான வேறுபாடுகள்
தமிழ் வலைப்பதிவுத் திரட்டி ஒன்று... வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் ஓரிடத்தில் திரட்டப்படுதலைக் காண்க... நன்றி: தமிழ் மணம் திரட்டி




* வலைப்பதிவுகளில், புதிய வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் இலகுவானது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உள்ளிட்டுவிட்டு இலகுவாக ஒரு விசை மூலம் சமர்ப்பித்துவிட்டால் தானாக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.


* வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைபப்திவிலேயே பதிவு செய்யும் வசதிகள் உண்டு.


* வலைப்பதிவுகள் செய்தியோடையைப் பயன்படுத்தி பெரும் சமுதாயமாக திரட்டி ஒன்றினைச்சுற்றி உருவாகிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

* நிறுவனங்கள் வலைப்பதிவுகளை வைத்திருப்பதற்கான இடவசதியையும் வார்ப்புருக்களையும் மின்னஞ்சல் போன்று இலவசமாகவே வழங்குவதால், வழங்கி, ஆள்களப்பெயர் போன்றவற்றுக்கு எந்தவிதமான கட்டணங்களும் செலுத்தவேண்டியதில்லை.


* தேடுபொறிகள் தமக்கென தனியான வலைப்பதிவுத் தேடல்களை வைத்திருப்பதாலும், வலைப்பதிவுகள் எல்லாம் பெரும் வலையமைப்புடன் இணைந்திருப்பதாலும் சில நாட்களிலேயே வலைப்பதிவு உள்ளடக்கங்கள் தேடுபொறிகளில் பட்டியலிடப்பட்டுவிடும்.


* செய்தியோடை வசதி, தன்னியக்க ஒழுங்குபடுத்தல்களுக்கான நிரலாக்கம் எல்லாம் சேவை வழங்குநர்களாலேயே பெரும்பாலும் தரப்பட்டுவிடுவதால், பராமரிப்பதற்கோ, உருவாக்குவதற்கோ கணினி இயல் அறிவு பெரிதாகத் தேவைப்படாது.



வலைப்பதிவின் வரலாறு


* WebLog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 இல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.


* குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் WebLog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.


* 1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.


* 1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது.


* ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.


* முதல் தமிழ் வலைப்பதிவாளராய் கார்த்திகேயன் இராமசுவாமி கருதப்படுகிறார் [மேற்கோள் தேவை]. இவரது முதல் தமிழ் இடுகை ஜனவரி 01 2003 இல் இடப்பட்டுள்ளது


* ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்

தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள்

தமிழ் வலைப்பதிவுத் தொகுப்புகள்

பட்டியல்கள்

(நவம்பர் 2005 வரையிலான தொகுப்பு. தற்போது இற்றைப்படுத்தப்படுவதில்லை)

 

வலைப்பதிவு சேவை வழங்குநர்கள்


வலைப்பதிவு - ஒரு நீண்ட வரலாற்று தகவல்
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
பிரபலபடுத்துவது என்பது உங்கள் கையில்...

1 comments:

Chitra said...

Blog wikipedia....Super!

The pics, that you had selected are also nice.